Monday, April 16, 2012

நேற்றைப் பார்த்தேன்


நாம் படித்த கல்லூரிக்கு
போய்  இருந்தேன்...
இன்னும் என் நினைவு
நீ வராமல் போன
அந்த நாள் தொட்டு
உனக்காய் காத்துக் கிடக்குது
வாசல்  பார்த்து...


நான்  வணங்கிய
கோவிலுக்குப் போய் இருந்தேன்
அங்கே கணபதி சிரித்திருந்தான்
நம்மைப் பிரித்து தனக்குத் துணையாய்
என்னை ஆக்கிய சந்தோசத்தில்...

நம் கணினி ஆய்வகம் போனேன்...
என்றோ நீ பார்க்க
நான் எழுதிய ப்ரோக்ராம்
மின்வெட்டின் உதவியால்
ஓய்வெடுத்துக் கிடந்தது...


நீ வகுப்புவராத நாட்களுக்காய்
நான் எழுதிய வகுப்புக்குறிப்புகளை
இன்று புரட்டிப் பார்க்கிறேன்...
நீ வாங்கிப் பார்த்த உன்
கைரேகைகள் கனத்தது...


என் துணிப்பெட்டியை
உருட்டிப்பார்த்தேன்...
என் உடைகள் உன் உடை
நிறம் பொருந்திய அந்நாட்களை
எண்ணி ஏங்கியே சாயம் போய்க் கிடந்தது...

என்  கவிதைகளைப்
புரட்டிப் பார்த்தேன்...
என் காதல் என் கண்ணீர்
கடலுக்குள் தற்கொலை செய்து
எழுத்துப் பிணமாய் கரையோதுங்கிக் கிடந்தது...

நான் காதல் சொன்ன
அந்த இடம் போனேன்...
அன்று நீ உடைத்துப் போட்ட
என் இருதயத்தின் ரத்தத்தில்
இன்னும் குற்றுயிருடன் கிடக்குது
என் காதல்... நீ ஏற்றுக்கொள்வாய் எனும் நம்பிக்கையில்...


வலியின்மொழியில் நீ எழுதிய 
என் நேற்றை, என் காதலை
நான் திரும்பிப் படித்தேன்...

என் கண்ணீர் மொழியில் மொழிபெயர்த்து...

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்