Monday, June 11, 2012

சாரல் சிதறல்


பிறந்த வீடு பிரிந்து
புருஷன் வீடு போனவ
தலை பிரசவத்திற்கு தாய் வீடு
வந்தப்ப நிறைமாதத்திலும்
தோழி என்ன பார்க்க ஓடி வந்தா
ஆவியாகி மேகமாகி தூறி
ஊற்றாகி அருவியில் ஊற்றி
பள்ளம் தேடி ஓடி வரும்
இந்த மழையப் போல...

#.#.#.#.#.#

பங்குனித் திருவிழாவிற்கு
விடுமுறையில் வந்தவன்
படிச்ச பள்ளி போய்
பச்சை ரிப்பன்காரிய நினச்சு
காதல் வரி எழுதிய
தேக்கம் மேசை தடவியது போல்
உச்சாணி தொட்டு
என் அடிப் பாதம் வர
இச்சென்ற சத்தம் இல்லாத
முத்தம் தரும் அந்த மழ...

#.#.#.#.#.#

மேகம் விசித்திர சலவக்காரி
இவ அடிச்சு இடிச்சு
துவச்சப்புறம் தான்
இந்த வானம் கிழியாமல்
ஏழு வர்ணத்தில் சாயம் ஏறும்

#.#.#.#.#.#

தென்றல் மருத்துவம்
கொளுத்த மேகத்தை
மாதம் மும்மாரி ஓடச் சொல்ல
சோம்பேறி மேகம்
வருடம் ஐந்தாறுமுறை ஓடிப்பார்க்க
குறையும் அதன் வியாதி
மழை வியர்வையாய்

#.#.#.#.#.#

மழை என்ன பெண் சாதியா
என் மேல் விழுந்து
என்னுள் பார்த்த ரகசியத்தை
இப்படி ஊருக்கெல்லாம் சொல்கிறது
என் உடை நனைத்து

#.#.#.#.#.#

அந்த மேக பேனா
மையை சும்மா கொட்டிவச்சாலும்
அது ஓர் எழுத்தில்லா கவிதை
என்கிறது அழகிலக்கணம்...
அதை மழை என்னவளிடம் தான்
கற்றிருக்கும் என்கிறேன் நான்... 

1 comment:

  1. ம்ம்ம்
    எல்லா கவிதைகளும் அருமை
    அதிலும் ''மழை என்ன பெண் சாதியா'' மிகவும் அருமை தோழரே

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்