Wednesday, September 5, 2012

MAKEUP போட்ட கவிதை


ஓவியம் ஓவியன் வரைந்ததாகவே
இருக்கும் வரை தான் அழகு...
தனியாய்  சிங்காரம் செய்யாதவரை
தான் பெண்ணும் சிங்காரி...

உன்னை அசிங்கமாக்கும் அதற்கு

அலங்காரம் அழகு சாதனம் அழகு நிலையம்
என்று எவனடி பெயர் வைத்தான்...

சீதை நாணேற்றி
ராமன் நான் சிறை வீழ்ந்தேன்
என்று  என் பேனா பேசி இருக்கும்

அந்த கிறுக்கு சிறுக்கி விரலில்
இறுக்கி பிடித்த நூலிடம்
உன்  புருவக் கூந்தல் அறிபடாமல் இருந்திருந்தால்

மஞ்சள் கரிசாலை சாறெடுத்து
வெள்ளைத்துணி நனையவிட்டு
நெய்விளக்கில்  எரியூட்டி
விளக்கெண்ணெய் விட்டு குழைத்து
கள்ளி  நீயும் பூசி வந்தால் போதுமே
இந்த மாமன் நெஞ்சு களவுகொடுப்பேன்

அதை  விட்டு பங்குனி மாச
மச்சு வீடு மாதிரி இமைஎல்லாம்
இம்புட்டு  பூச்செதுக்கு?
சும்மாவே பெண் தினம் அழுவாள்
இதில் கண்ணுக்குள் ரசயான மையெதுக்கு

உன்  உதடு சாயமிறங்கி போயிருந்தால்
இனி எனக்கு சொல்லி அனுப்பு
முத்த முறையாலே முழுக்க சாயம் தாரேன்
அமுதுண்ணும் உதட்டில் விசத்துண்டு
எதற்கு உரச வேண்டும்

ஆயிரம் கறை இருந்தும்
அம்புலிய அழகில் மிஞ்ச ஆளேது?
அந்த  ஒற்றை பருவால்
நான் கொண்ட காதல் மாறது

தெரிந்தும்  ஏனடி...
எனக்கு காதல் தண்டனை கொடுத்த
உன் முகத்துக்கு வேதியல் தண்டனை...


இன்றொருநாள் அழகென்று
நீ பூசும் விஷமெல்லாம் நாளை விடியுமுன்னே
விஷமம் காட்டும் வேண்டாம்...

சிங்காரித்து  வந்த அழகாலே
என்னை  நீ இம்சிப்பாய்
நீ சிங்காரிக்க ஆராய்ச்சி என்று
அவர்களோ எலி முயல்களை இம்சிப்பார்கள்

இதெல்லாம் தேவையா?
நான் தேடும் அழகெல்லாம்
முகத்தில் அல்ல அகத்தில்...
என்  காதலை உள்ளே அனுப்பு
தன்னால் உள்புறம் அழகாகும் எனக்கானது போல்...


தொடர்புடைய  பதிவு - ஹைஹீல்ஸ் பற்றி 

பின்குறிப்பு  - கண்மை தயாரிக்க இன்னும் பல வழி இருக்கிறது. நான் சொல்லியது ஒரு வழி. 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்