Monday, December 5, 2011

என் கவிப் பிள்ளை


கார்விழித் திருடன்
களவாடிக் குவிக்கிறான்
காட்சிகளாய்...
அழகுகளை,
நிகழும் அழுக்குகளை...

கடக்கின்ற காலத்தால்
கற்பனை தூசி படிக்கிறது
குவியல்கள் மேல்
மணக் கருவறைக்குள்

தமிழ் உயிர் சேர்ந்து
காட்சிக் கரு
உருக் கொள்கிறது
கவிதை மழலையாய்

என் மனையாள்
பேனா வயிறு வீங்கா
கற்பம் கொண்டு
பெற்றெடுத்த தமிழ் மகன்
தலை மகன் தழைத்த மகன்

என் கவி மகனின்
முதல் மொழி
காதல்


என் வித்து
பேனா மடிமோதி
தமிழமுதம் தினமுண்டு
வளர்கிறான்
உலகின் கத கதப்பில்

நிகழ்ந்தேரும் அநியாயங்கள்
கிள்ளி விடுகையில்
பேனாவின் தாலாட்டுக்கள்
அவனை உறங்க வைக்கிறது
கவிதைகளாய்
காகிதத் தொட்டிலில்

ஏழை அப்பன் நான்
காகிதத் தொட்டில் தந்தேன்
இன்று புத்தகமாய் வளர்ந்தவன்
அலமாரிக் கட்டில் கேட்கிறான்

சமாளிக்கத் தெரியாமல்
என் மூளைக்கும் வேலைக்கும்
இடையிலே
மின் வலையாலே
ஊஞ்சல் ஒன்று
கட்டிக்கொடுத்து
ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்...

இதோ இன்னும்
சிதறல்கள் வலை ஊஞ்சலின்
ஆட்டத்தின் மயக்கத்தில்
என் கவிக் குழந்தை
வளர்கிறான்




1 comment:

  1. வளரும் உன் கவிக்குழந்தையின்
    வல்லிய ரசிகன் நான்:)

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்