Wednesday, March 28, 2012

தினம் தினம்

எதோ ஒரு தோழி அனுப்பி வைத்த
மின்னஞ்சல் கணபதியை
ஐந்து பேருக்கு அனுப்பினால்
நினைத்தது நொடியில் நிறைவேறுமாம்...
இதோ அனுப்பி விட்டு
உன் காதலுக்காய் காத்துக்கிடக்கிறேன்

முகப்புத்தகம் முதல்
linkedIN வரை நீ இல்லை
என்று தெரிந்த இடமெல்லாம்
என் கண் பார்வையை
காவலுக்கு வைத்து
உன்னைத் தான் தேடி திரிகிறேன்

உன் எண் இல்லை
ஏனோ தெரிந்தும்
60 லட்சம் முடித்து
60 லட்சத்து 1வது முறையாய்
என் கைப்பேசி மெமரிக்குள் சுற்றி வருகிறேன்

முன்னே செல்லும் பெண்
நீ இல்லைத் தெரிந்தும்
ஏனோ ஒரு முறை பார்க்கத் தவிக்கிறேன்...

பின்னால் அழைக்கும் ஓசை
கேட்கும் போதெல்லாம்
நீயாக இருக்க வேண்டிக்கொண்டே
திரும்பிப் பார்க்கிறேன்...

உன்னை ஒருமுறை
பார்த்திடும் ஆசையில்
உன் ஊரின் மொத்த பயணத்தையும்
நானே பதிவு செய்து irctc - யையே குழம்பவைக்கிறேன்.

நீ மடலனுப்பாத போதும்...
உன் மடல்தேடிதானே
என் மினஞ்சல் பெட்டியை
தினம் அலசினேன்

உன்னைத் தரமுடியாது என்று
உன் பெற்றோர் தானே முடிவெடுத்தனர்...
இன்னும் கடவுளின் முடிவு வெளியாகவில்லை
என்ற நம்பிக்கையூட்டிய உயிரில் நான்...

Tuesday, March 27, 2012

மூடிக்கிடப்பவைகள் - 3

மூடிக்கிடப்பவைகள் - 1 | 2

வந்துவிட்ட காதலை
காதலியிடம் சொல்லுபவர்களை விட...

முகப்புத்தக சுவரிடம் 
புலம்புவர்கள்தான் அதிகம்...

அதனால் தான் உலகம்
காதலர்களை கிறுக்கன் என்கிறது
கவிதை எழுதுபவனை
காதலிப்பவன் என்கிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*'

 சோதித்து 
தயார்படுத்த வேண்டிய கல்வி
என்று சோதனையால்
பயம்மேற்றி பின்தங்க  வைத்ததோ... 

அன்றே... மனிதனின் 
அறிவு  சுமையாணது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*'

நீ விரல்விட்டு 
கடையும்  உணவுப் பாற்கடலில்

அமிழ்தம் இருக்குதோ இல்லையோ
நிச்சயம்  நச்சு இருக்குது...

நவீன உலகின்
அரக்க உடலே உனக்கு விருந்தாக...

Monday, March 26, 2012

துளிகள் - 7

துளிகள் - 1 | 2 | 3 | 4 | 5 | 6


காலத் தாமதத்தில்
குறையும் என்று காத்துக்கிடப்பவரை
ஏமாற்றி அதிகரித்துப்போகும்
தங்கத்தின் விலையும் என் காதலும்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

சென்னைக் கொசுவை
கடியாதே என்று சொல்வது போல்
என்னைப் பார்த்து
உன்னை மறந்துவிடு என்பதுவும்...

மீள முடியா போதையல்ல,
விட்டொழிக்க முடியா பழக்கம்...
என் காதல்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

ஞாயிறு மதியத்துத் தனிமையாய்
எந்தன் இருதயம் முழுக்க வெறுமையாக்கிப் போனாய்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என் காதல் வயதைப்
பறித்துவிட்டு
கவிதை ஊன்றுகோலுடன்
தனிமை முதுமையில்
தள்ளி விட்டாய் எனை...

இங்கு என் பிறந்தநாள்கள்
சோகமாகவே நகர்கிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

மரணத்து வீட்டில்
அறுசுவை விருந்தை போல்

காய்ச்சலின் படுக்கையில்
தீம்பால் குவளை போல்

ஏனோ நீயில்லாத நான்
உயிரோடு பிணமாக...


மூடிக்கிடப்பவைகள் - 2

மூடிக்கிடப்பவைகள் - 1

பல ஆண்களுக்கு 
ஒரு முழ துப்பட்டாவின் பின்னாலும்
பல பெண்களுக்கு 
இரு அங்குல zipper உள்ளும் 

பூட்டிக் கிடக்குது எதோ ஒன்று...
காதலென்று சொல்லிக்கொள்கிறது 
காலக் கூற்று...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

வீசும் காற்றிடம்
முறுக்கி நின்று
சாய்ந்து போகும் விருட்சமாக விருப்பமில்லை
என்று சொல்லி
வளைந்து கொடுத்து நாணலானாய்...

இதோ இன்று அவன்
பிஞ்சு வாரிசுகள்கூட
உன் உச்சி முடி பிடித்திழுத்து
உன்னை வேரோடு புடுங்கும் அளவு மெலிதானாய்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


மக்களாட்சி என்று சொல்லிக்
கொடுக்கப்பட்ட ஓட்டுரிமை
மேல் நோக்கி உமிழப்படும் எச்சில் போல
உன் உரி"மை"யால் நீ எழுதிக் கொள்வது
உனக்கு சாபத்தை தான்... ஐந்தாண்டு தவணை முறையில்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


என்று தமிழ் நாக்கு
தமிழ் காதுகளிடம்
"hi", "how are you?", "so sweet"
என்று ஆங்கிலத்தில் உரையாடும்
பொய் போதை ஏறியதோ நமக்கு

அன்றே தமிழ் மரித்துப் போனது...

Sunday, March 25, 2012

மூடிக்கிடப்பவைகள் - 1

























வாழ்க்கை சுவைக்க
வேண்டி வேலைக்கு வந்தவன்
முகமூடி சிரிக்க
அழுது கொண்டிருக்கிறான்....

இவன் வாழ்கைக்காக
நிறம் மாற்றிக் கொண்டவன்...

வாழ்க்கை பசிக்காக
பொம்மை அடுப்புக்குள்
சமைக்கப்பட்டுகொண்டிருக்கிறான் தினம்

இவன் பொம்மை உதடுகள் வழி
தேவதைகளை சிரிக்க வைக்கும்
புண்ணியம் செய்து கிடக்கிறான்...

Friday, March 23, 2012

துளிகள் - 6

துளிகள் - 1 | 2 | 3 | 4 | 5


Excel இல்லாத
மென்பொருள் நிறுவனமாய்
நீ இல்லாத நான் ... வீணாய்
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

ஏன் என்னை சுற்றி
எல்லோரும் உன் முகமூடி
அணிந்து திரிகிறார்கள்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என் விரல்களும் ருசியரியும்
உன் அருகினில் நான் உணர்ந்தேன்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

நான் உன்னை
கவிதையாக்கினால்
கண் முன் உன் ஓவியம் தெரியும்
நான் உன் உருவை
ஓவியமாக்கினால்
காதுக்குள் எதோ கவிதை வாசிக்கும்
நீ என்னை விசித்திரன் ஆக்கிவிட்டாய்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என் கண்களின் வாய்கொண்டு
நான் தின்னும் போதை மாத்திரை "நீ"

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

உன் வார்த்தைகள்
உருவமில்லாத மலைப்பாம்பு
என்னை இறுக்கி நொறுக்கி
உனக்கு ஏதுவாக்கிக் கொள்கிறது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

உன் பார்வையிடம்
பறிபோன என்
ஆண் கற்பின் அடையாளமாய்
இதோ நான் இதயகற்பத்தில்
சுமந்து திரிகிறேன் நம் காதல் குழந்தையை

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

உன்னை என் தமிழ்
கட்சியில் உருபினராக்கினால்
என் கவிதை தொண்டர்களை
உனக்கு இலகுவாய் வசிகரித்தாயே...

இனி என்று என் காகித
சிம்மாசனப் பதவி உனக்குதனோ?

Thursday, March 22, 2012

மின் குருடு


8 கோடி ஜோடி
கண்களிருந்தும் நாங்கள்
குருடாகிப் போகிறோம்
எங்கள் அரசின் அலட்சியத்தில்

அரசே! நீ ஏற்றிய பெட்ரோல் விலையில்
எலெக்ட்ரானெல்லாம் பயணத்தை குறைத்தோ?

மாரி மாறி போனாலும்
சூரியனின் சூடு மங்கிப் போகவில்லை
சூரிய மின்கலம் இருந்தும்
இங்கே மின்சாரப் பற்றாக்குறை

பொதிகை தென்றல் தொலைந்தாலும்
பாலை வேட்கை இன்னும் வீசுது
காளானாய் முளைத்த காற்றாலை இருந்தும்
கரண்ட் மட்டும் போதவே மாட்டேன் என்கிறது

ஆட்சியுரிமைக்கு வரி போடும் குறி இருக்கு
விலை பளுவால் கஜான நிரப்பி
சுரண்டிப்போக வழி இருக்கு
ஐந்தாண்டுகள் ஒருமுறை தேர்தல்
அது ஒன்றால் தான் மக்களே நினைவிலிருக்கு

படித்தவனென்று பிதற்றிக்கொள்ளும்
பட்டினத்துக்காரனுக்கெல்லாம்
அவன் வீட்டில் வெளிச்சம் இருக்கும்வரை
அரசியலெல்லாம் ஒவ்வாது
பறிபோகும் இவன் உரிமையெல்லாம்
செய்தித்தாளில் வெறும் செய்தி இவனுக்கு

இந்த நேரம்
நெடுந்தொடரால், வீண் விளக்கால்
வீணாகும் மின்சாரம் இனி இல்லை...
மாணவர்கள், குறைகின்ற மதிப்பெண்ணிற்கு
காரணமாய் குற்றவாளிக் கூண்டிலிது
விவாசாயி சிறுதொழிலாளி
இயல்பில் புது பளுவிது...

அரசே!
நீ எதை சாதித்தாயோ இல்லையோ
ஊரில் ஒரு 8 மணிநேரம் அமைதி தந்தாய்...
ஓயாத உழைப்புக்கு உவமையான
இயந்திரங்களுக்கு ஓய்வளித்தாய்

Wednesday, March 21, 2012

குற்றுயிருடன் காதல்

 காதல் இன்னும்
இருக்கிறது


பரண் தூசிக்குள்
புதைந்து கிடக்கும்
அவனது நாட்குறிப்பில்


அவள் நினைவாய்
இவனது மகள் பெயரில்


கரையாத காதல்
அவள் கடவுச்சொல்லில்


தலையணை நிலத்தில்
தினம் பொழியும்
இவளது கண்மேக மழையில்


அவளது மின்னஞ்சல் பெட்டியுள்
என்றோ அனுப்பப்பட்ட
இவனது கவிதையில்


அவனது மின்னஞ்சல் பெட்டியுள்
என்றோ மறுமொழிக்கப்பட்ட
அவளது அச்சத்தில் 
 
மாலைமாற்றும் முன் இவ்வளவுதான்
என்று  சொல்லி அன்றுகொடுத்து 
இன்றும்  அவன் கழுவாமல் வைத்திருக்கும் 
அந்தக் கண்ணத்து எச்சிலில்

இவனது கரங்களால்
அவளது கூந்தலை அலங்கரிக்க
தினம் ஒடிந்த ரோஜாவின் தழும்புகளில்


அவள் மறுத்த இடத்தில் 
அன்று உடைந்து  விழுந்த
இவனது இருதய ரத்தக் கறையில்


காதல் இன்னும்
இருக்கிறது குற்றுயிருடன்


காதல் காதலாய் வென்றது வாழ்ந்தது
வெறும் க(வி)தைகளிலும் கனவுகளிலும் மட்டும்தான்

Tuesday, March 20, 2012

துளிகள் - 5



துளிகள் - 1 | 2 | 3 | 4
காகிதத்தில் என் பேனா
எழுதிய என் கவிதைகளைவிட

என் தலையணையில்
என் கண்ணீர் எழுதிய வரிகள் தான்
என் காதலை அதிகம் சொல்லும்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என் காதல் குழந்தையை
தனிமை திருவிழாவில்
தொலைத்துவிடும் ஆசையில்
தினம் அழைத்து செல்கிறேன்...

அது திருவிழா கடைகளில்
விற்கப்படும் உன் நினைவுகளை
என்னை நச்சரித்து வாங்கி
நிரப்பிக்கொள்கிறதுகிறது  என் இருதயப் பையை...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உனக்கு  பெயரிட்ட
உன் பெற்றோர் கவிஞனடி
என்று பாடியே தோற்றுப் போன
என் காதல் இன்று என் மகள் பெயராய்...

இன்று என் மகளைப் பார்த்து
அவள் காதல் பாடுகிறது
நான் கவிஞன் என்று...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அன்று  முதல்
நான்ஆக்ஸிஜனைவிட
உன்  நினைவைத் தான்
அதிகமாய் சுவாசிக்கிறேன்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*


 என் காதலை கவிதையாக்குகிறேன்
 என்று என்மேல் குற்றம்...

இங்கு  என் காதல்
கரு சுமக்கும் காகிதமாக
கருத்துக்கு மொழியாக
 உரு கொடுக்கும் மையாக...

இன்று சொல்கிறேன்...
என் காதல் தான்
 என்னைக் கவிஞனாக்கிருக்கிறது
எனக்கு முகவரி கொடுத்திருக்கிறது

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

அவளை மறந்துவிட
ஒரு சாலையில் போய்கொண்டிருக்கிறேன்
சாலையோரத்து  சுவரெல்லாம்
அவள்  நினைவு விளம்பரமாய்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உன்னை 
என் ஒரு இருதயத்தால் மட்டும்
நினைத்துக் கொண்டிருந்ததால்
 மறப்பது அவ்வளவு கடினமாக இருந்திருக்காது...

பேனா, கைப்பேசி, வலைப்பூ
என்று செயற்கை இருதயம்
இத்தனை பொருத்தி
உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

நாம் புரட்சியாளர்கள்

வெறும் தங்கம் மாற்றியா
நம் திருமணம் நடந்தேற வேண்டும்

அதான் உன்/என் விழி வழி
wireless முறையில்
இருதயம் மாற்றியே ஜோடி நாம்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

 காதல் கெட்ட
 வார்த்தையாகவே இருந்தாலும்

அதை நான்
சொல்லும்  முன்
நீ கோபம் கொண்டது ஏன்?

தொலைவுணர்வு* சொல்லியாதா?
காதலின்றி எப்படி நமக்குள்?

தொலையுணர்வு - telepathy

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

எதோ சொல்ல நினைத்து
என் கவிதைகள் தொடங்கப்படுகிறது...

இருந்தும் ஏனோ எதுவுமே
சொல்லப்படாமல் முடிந்து போகிறது....

என் கவிதைகள் எல்லாமே
என் இயலாமை, கோழைத்தனத்தின் சாயங்கள்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என் தனிமைக் காகிதத்தில்
எழுதி  நிரப்பி காலியாகிப் போகும்
உயிர்"மை" என் கவிதை...

Tuesday, March 13, 2012

தமிழ் கேட்குமா?


8 கோடி செவிடர்கள்
வாழும் தேசமே!
செம்மொழி இருந்தும்
ஊமையான அவலமே!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்ற கவிதைகள் இன்று
என் சகோதரனின் படுகொலையை
வேடிக்கை பார்க்கும் வெட்கம்...

தானாடாவிட்டாலும்
தன் தசையாடிய தமிழன்
இன்று தன் வீட்டில் சவம் விழுக
தானே  ஒருக் காரணமாய்...

செருப்படிபட்டவன்
கிறுக்கு  மொழி பேசுகிறான்
அது தோழமைதேசத்தின்
மதசார்ப்பின்மைக்கு பங்கம் என்று
உன் உறவின் கருவருக்கையில்
இவனின் அறங்கள்
அரசு  முறை பயணமா போய் இருந்தது?

ஈராக்கையே தீக்கிரையாக்கிய
அமெரிக்கனின் கண்களிலேயே
கண்ணீர் தந்த ஈழத்து மரணம்
உனக்கு  மட்டும் ஏனோ
ஆயுதம் விற்கும் வியாபரமாய்த்
தெரிவது ஏனோ?


 
மகன் புறமுதுகிட்டான் எனக்கேட்டு
பாலூட்டிய மாரருக்கத் துணிந்த
தமிழச்சி வாழ்ந்த தேசம்...
பணத்துக்கு ஆசைப்பட்டு
தன் உறவுக்கு விசமூட்டும் வேசம்...

பிரங்கிக்கு  மார் நிமிர்த்திக் காட்டி
மறத்துக்கு புதிதாய் அறம் சொன்ன தேசம்...
ஒற்றை  வீரனை 100 பேர் கொல்லும்
கோழைத்தனத்திற்கு  சாமரம் வீசும் வேஷம்...


கொட்டும் தேழையும்
காத்த ரமணன் பிறந்த மண்ணே
எறும்பை நசுக்குதலும்
பாவம் என்றெண்ணிய புத்தன் தேசமே
300 ஆண்டு வேரிட்ட ஆங்கிலய ஆழையே
ஒரு விரதத்தில் விரட்டிய அகிம்சை கருவரையே
இன்று உன் சகோதரனின்
படுகொலை எதிர்த்து
பேச  ஒரு குரல் இல்லாத
அவலம்  ஏனோ?

முகம் தெரியா பெண்ணின்
முகப் புத்தக சுவரில் "cute"
எழுதும்இளைமையே...
இரண்டாம்  மனைவி கட்டுவதேப்படி,
மாமியார் மருமகள் எதிராளியாவதேப்படி
என்று வேண்டா பாடம் சொல்லும்
நெடுந்தொடர்க்கு  ஓடும் கண்ணீரே...
பங்குச் சந்தையின் சரிவுக்கும்
சாலை நீள நெரிசளுக்கும்
மட்டும் அரசை நொந்துகொள்ளும்
குடும்பத்  தலைமையே...
தலைவன் சொல்லியதை
டிக்கெட்டோடு கிழித்துப் போட்டு
அடுத்த கட்டவுட்டுக்கு பால் தேடும் ரசிகனே...
தமிழைக்  கொள்ளும் கொலைவெறி பாடலென்று
முட்டாள்  ரசிகனின் மூளையில்
பணம் அருவடைசெய்யும் ஊடகமே...

கார்கிலில்  எதிரியின்
புறமுதுகு  பாரத்த வீரம் எங்கே?


இன்னும் இந்த தேசத்தில்
எஞ்சி இருக்கும் மக்களாட்சியை
தூசி தட்டுங்கள்...
என் ஒரு கையேடு சேர்ந்து ஓசை தாருங்கள்

அவன் மரணத்தைதான் தடுக்கவில்லை
மனுநீதியின் வாரிசுகளே...
அவன் படுகொலைக்கு தர்மமாவது
கேட்போம் வாருங்கள்...

Monday, March 12, 2012

துளிகள் - 4

துளிகள் - 1 | 2 | 3 

என்  இருதயத்தை திருடி
பொறியியல் கல்லூரியில் வைத்து
மருத்துவத்திற்கு பயிற்சி எடுத்தாள் என்னவள்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
மதங்கள் சொல்லிய
பல முட்டாள்தனங்களை
ஏற்றுக் கொண்ட தமிழ் குலமே...

கண்ணன் ராதையாய் "காதல்"
முருகன் வள்ளியாய் "கலப்புத்திருமணம்"
என்ற அறங்களை
ஏற்க மறுப்பது ஏனோ?

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

வெறும் உடல்கள் கூடி
பத்துமாத சுமையில் 
பிண்டத்தை புறவாய்வழி துப்பும்
காமம் சொல்லவா மூன்றாம்பால்
தேவைப்பட்டது வள்ளுவனுக்கு...

இல்லை இல்லை
காத்திருப்பு,
பிரிவு, பரிதவிப்பு,
கற்பு, ஒழுக்கம்,
ஊடல்,  கூடல்,
திகட்டாதக் காமம்,
குன்றாத காதல்
சொல்லத்தானே தேவைப்பட்டது
பொய்யாமொழியிலொரு
களவியலும் கற்பியலும்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என்றோ  நான் படித்த
ஒரு கவிஞனின் பேனா
என்னைத் தாக்கி விடுகிறது

இதோ என் எழுத்துக்களில்
இன்னும் அந்தக் காயத் தழும்புகள்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

என் பார்வை சீதையின்
பாதம் பட்டு ...
காட்சி அகலிகைகள்
என்  கவிதைகளில் எழுகிறார்கள்...

அது சாபத்தின்
விமோட்சனமா? இல்லை
அதுதான் சாபமா...
என் வாசக கம்பர்களின்
கருத்து ராமாயாணம் சொல்லும் க(அ)தை

ஆறாவது வித்தியாசம்





















எதிர்பால் வெறும்
காமக்  கண்
பார்வையாய் பார்ப்பவனுக்கும்,
இன விருத்திக்காய்
இணையை தேடும்
அஃறிணைக்கும் வித்தியாசம்
வெறும் ஒரு அறிவு...

உச்சரிக்கும்  வார்த்தைகளால்
நிச்சயம் யாருக்கோ காயம்
தெரிந்தும் உதிர்கிற வார்த்தைக்கும்

பாதங்களை காயமாக்கும்
பாதை  முட்களுக்கும் வித்தியாசம்
ஒரே ஒரு உயிர்...

அடிபட்டு ஒரு உயிர்
துடிதுடித்துக் கிடக்கையில்
சுற்றி நிற்கும் உடல்களுக்கும்
அவன்  ரத்தத்தில் மொய்க்கு ஈக்கும்
வித்தியாசம் ஒரு பெயர்தான்

நொடிக்கொருவனு(ளு)டன்
காதல் என்ற பெயரில்...
மணிக்கொருவனிடம்
விபச்சாரம் என்ற பெயரில்...
 வேசிக்கும் வேசக் காதலுக்கும்
 வித்தியாசம் ஒரே ஒருவார்த்தை...கற்பு

ஆறறிவு உடல்களுக்கும்
அஃறிணைகளுக்கும் வித்தியாசமாய்
ஒரு பகுத்தறிவு...
பகுத்தறிந்து  பகுத்தறிந்து
இனம் சிதறிக்கிடக்குது சாதி என்னும் பெயரில்
அந்த வித்தியாசமே
இன்று அவனை அஃறிணையாக்கிவிட்டது

Wednesday, March 7, 2012

மாதராய் பிறந்திட மாதவம் செய்தவளே v2012

மாதராய் பிறந்திட மாதவம் செய்தவளே 2011





















படைத்தவனையே 
படைத்தவள்  - தாய்
கிடைத்ததெல்லாம் 
பகிர்ந்தவள்  - தங்கை தமக்கை
தோள்களில் 
என் அன்னைக் கருவறையுடன் - தோழி
நான்  தேடிய இன்னொரு பாதி
மேல்  சொன்னவர்களின் நகல் - என் காதலி
தனக்காக படைக்கப்பட்ட வாழ்க்கையை
எனக்காக கொடுத்தவள் - என் மனைவி

நிச்சயம் இந்த மாதர்களுக்காய்
நீ மாதவம் செய்திட வேண்டுமட...

மின் விசிறிக்கும் க்கிரைன்டர்க்கும் கூட
மின்வெட்டில்  ஓய்வு கிடைத்து விடுகிறது...
 பெண்ணாய் பிறந்தவளின்
வாழ்வில் ஓய்வென்பது
மிகக் குறைவே...

காலம்  சவாலிடும்
அடுப்பூதும் உனக்கெதுக்கு 
படிபென்று...
உடன் படித்தவர்கெல்லாம்
சவாலாகிப் போனாள்

"புகுந்த வீட்டில் 
எப்படி பிழைக்க போகிறாய்"
என்ற பெற்றவள் வார்த்தை
துரத்த ஓட ஆரம்பித்தவள்...

உலக்கை இல்லாத 
மெலிந்த  உரல் இவள்
இருந்தும்  இடி படுகிறாள் 
மாமியார் விரல்களில்...

கணவனின்  பசிக்கு
விருந்தாகிப் போனவள்...
குழந்தையின் அழுகைக்கு
ரத்தத்தை பாலாக்குவாள்...

இயல்பை புரட்டிப்போட்டவள்
பெண்கள்  நுழைய 
முடியாதென்றிருந்த  துறைகளிலெல்லாம்
பெண்கள் இல்லாமல் முடியாதென்றொரு
இலக்கை  எழுதிக் கொண்டிருப்பாள்...

பெண் - உன் வாழ்க்கைக் கவிதையின் பொருள்
ஆண்  காகிதம் இவள் அழகாக்கும் ஓவியம்

பெண்ணில்லாத நீ
சிலைகள் இல்லாத கோவிலாய்
மின்வெட்டு  நேரத்து சென்னை இரவாய்

எந்த மொழியிலும் தேடிப்பார்
அவன் என்ற வார்த்தைக்கு
நிச்சயம் அவளென்றொரு பொருளிருக்கும்

என் வாழ்விலும் பொருள்சேர்த்த பெண்ணே(களே)
இனிய  மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்

Sunday, March 4, 2012

துளிகள் - 3

துளிகள் - 1 | 2 
புணர்தலின் வலிகளை சுகம் என்னும் கூட்டம்
உணர்வின் வழிகளை வலி என்பதில் வியப்பென்ன...
உலகம் செய்யப்பட்டதென்னவோ அன்பாலே.
உயிர்களில் பல செய்யப்பட்டதென்னவோ 
வெறும் கட்டில் சுகத்தால் தானே...
அதான்  அதை தேடும் அவர்களின் 
இயல்பிலிருந்து பிறழ்பவர்கள்
தீட்டாகிப் போனார்கள் காதல் உட்பட...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

புத்தகமோ... புத்தக கணினியோ....
மூடி வைத்து நிமிர்ந்து பார்.
அறிவு அளவில்லாமல் கிடக்குது...

உலகம் ஒரு விதிகள் இல்லாத நூலகம்.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

பிடிக்காதவர்களைக் 
கொல்லவேண்டுமென்று  நினைத்தால்
உன்னை கொல்லும் நாளும் வரும்...

கொடியவனைக் கண்டு
தூர விலக வேண்டுமென்றால்
இந்த  உலகத்தை காலி பண்ணவேண்டும்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உன்னால்  இன்று 
என் சிரிப்புதான் 
பெரிய பொய்யாகிப் போனது.

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

உச்சரித்தாலே சுடுகின்றத் தீ - காதல்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*

என்  முகப்புத்தகச் சுவர்
என் கவிதைப் பக்கங்கள்
உன் காதுகளாக ஆக ஆசைப்படுகிறேன்
நான் சொல்வதை இதயத்தில் பதித்துக் கொள்கிறது 
அதுமட்டும்தான் மறுக்காமல்...

Saturday, March 3, 2012

காதலும் வெளிநாட்டு மாப்பிளையும் - 2

காதலும் வெளிநாட்டு மாப்பிளையும் : 1
மு.கு. - கருத்து எதிர்ப்பாய் தெரிந்தால் 
            இரண்டு வழி இருக்கிறது... 
            1) திரையின் வலப்புறம் "X" சொடுக்கி பக்கத்தை மூடவும்
            2) கீழே கருத்தில் தெரியுங்கள்...புரியாதது புரியும் கசப்புகள் மறையும்


கடவுளுக்குமுன் வைத்து
அரங்கேறும் ஒரே அநீதி...
காதலை கொன்று தளிரும் 
திருமணங்கள் தான்...

அப்பனாம் மகளுக்கு...
அவளை திருமண சந்தையில் விற்று
சட்டப்படி மாமனாகிறான்...

தாலி  காக்கும் வேலியாய் 
இருந்த காலங்கள் மலையேறிபோனது...
இன்று சிறை வைக்கும் வேலி...

திருமணங்களால் 
இன்று பல சீதைகள்
ராமனின் அசோகா வனத்தில்
வாடி வதங்கி போகின்றனர்...

மனதில் ஒருவன்
மாலையோடு மற்றொருவன்...
கட்டிலில் படுத்தால் தான் 
கற்புக்கு களங்கம்...
இருதயத்தில் சுமந்தால் இல்லை
என்று கண்ணகி தேசத்தில்
விதிகள் மாற்றி எழுதப்படுகிறது...

பாழும் கிணற்றில் தள்ளினாலும்
உனக்கு துணையாக்க மாட்டேனென்று
மகள் வாழ்வை கசப்பாக்குபவன்பவன் கோடி...
கொன்று போட்டாலும் போடுவேன்
சாதி மதம் தாண்ட மாட்டேன் என்று
தாமரைகளை  சகதிக்குள் புதைப்பவன் கோடி...

கொள்வதற்கு  பதில்
எங்களிடம் கொடுங்கள் வாழவைப்போம் 
என்ற காதலின் கேள்விகளுக்கு 
பதில் கிடைத்திருந்தால்
பலப் புதல்விகளின் வாழ்வு
கண்ணீரில் மிதந்திருக்காது...
மரணத்தில் முடிந்திருக்காது...

காதல் மலர்...
பாச பாதங்களுக்கு அடியில் 
நசிந்து போகின்றன... 
பெண் நான் என்ன செய்வேன்
என்கிறாள் மதுரை எரித்தவளின்
கொள்ளுப் பேத்தி...

இறந்த காதலுக்கு 
ஆறுமாதம் கண்ணீரஞ்சலி செய்தவள்...
வருங்காலத்தின் skype அழைப்புக்கு 
காத்திருப்பதால் நினைக்கக் கூட 
நேரமில்லாது போவது எப்படி...

வரும்  கணவனிடம்
இறந்த காதலை சொல்லிவிட்டேன்...
"இறந்த காலத்தை மறந்துவிடு "
என்றான் அவன் என்று பிதற்றுகிறாள்...
மறக்கப்படது அவைகள்...
அவன் இருதயத்தில் புதைக்கப்பட்டிருக்கும்...
நிச்சயம் ஒரு நாள்
நினைவுக்கு வருகையில்
வார்த்தை பிரளயாமாய் வரும்
நிச்சயம் உனை காயப்படுத்தும் 
மறவாதே...

காதல் என்று சொல்லிவிடுவதாலே...
மகளின் காதலனைத்  தவிர 
எவனும் நல்லவனாகத் தெரிகிறான்...
அந்த மடமையில் தானே
அயோக்கியனுக்கு 
மகள்களை உயிரோடு 
நரபலி கொடுக்கிறான்...
புஷ்பக  விமானத்தில் ராமனோடு
அசோக வனத்திற்கு பயணம்... 

காதலுக்கு...
உறவுகள், சமுகம்,
சாதி, மதம், பணம், வயது
என்று எல்லாம் தெரிந்து 
எதிரி ஆகையில்...
அப்பாவி அயல்நாட்டு 
தொழிலதிபர் அறியாமல் பெரும் எதிரி ஆகிறான்...

காதல் துவைத்து சுத்தமாக்க
உடையில் உண்டான கறையல்ல,
உடலில் எழுதப்பட்ட பச்சையம்.
சுட்டு காயமாக்க வேண்டும்.
தழும்பு நிச்சயம் மிஞ்சும்.
ஏனோ  இந்த விதிகள்
இந்தப்** பெண்களின்
திருமண வேள்விகளில் பொசுங்கி போகுது...

** - காதலை தெரிந்தோ நிற்பந்தத்திலோ, உதறி எரிந்து திருமணம் செய்யும் பெண்கள்



Friday, March 2, 2012

துளிகள் - 2

துளிகள் : 1




















எழுபத்தி இரண்டுக்கு மேல்
எண்கள் தெரியாத என் இருதயம்
எண்ணக் கற்றது சதங்களுக்கு மேல்
உன்னைப் பார்த்த அந்த நொடி...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

கொலைகள் செய்யும் 
ஒரே அன்பின் வடிவம் 
காதல்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

நான் காதலித்தபோது...
தற்கொலை இங்கே
குற்றம் என்றான் தோழன்...
இன்று அவள் பிரிந்த பிறகு,
மறந்துவிடு அவளை என்கிறான்.
கொலையும் குற்றம் தான்.
என்னை கொள்ள முயலாதே,
என்று சொல்லிட போனேன்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

no entry போடப்பட்டிருந்த
என் இருதயத்துக்குள்
அத்துமீறி நுழைந்தது நீ...
எனக்கு என் வலி என்னும் அபராதம்

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

காதலும் அன்பு சிவமே
அதான் இங்கே
அழிவின் வேலையை செய்கிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

நீ  என்னை
காதலிக்காமலே...
நம் குழந்தை என் கவிதை...
உன் பிரிவில் இங்கே அனாதையாய்...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~


காதல் ஒரு சாபம்...
இங்கே வரமாக கொடுக்கப்படுகிறது...

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

மன்மதனும்  காதலை எதிர்ப்பான்
அவன் தோழன்
காதலால் அழுவது பார்த்தால்...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்