Sunday, January 1, 2012

தினமும் மலர்வாள்


போர்வை விளக்கி
பள்ளிஎழும் என்னவள்
அதிகாலையில்
உதித்திடும்  வெள்ளி நிலா

வேம்பும்  கசப்புத்
துறந்தது
அமிழ்தமிவள்
பல்  துலக்க
குச்சி ஓடித்ததும்

வறண்ட கிணறு
வள்ளலானது பூ இவள்
குளிக்க நீர் கேட்டதும்

 நீராலே கூடியது 
(ஆசைத்)தாகம்
அவள்  குளித்து வந்து
உதறிய கூந்தலால்
தூறிய சாரலில்

கோலம்  போடத்
தெரியாதென்றால்
வேண்டாமடி செல்லமே
பாதம் பதிய 
நடந்து வா 
போதும் என்றேன்

மாவை நெய்து
பூமி பேதைக்கு
வண்ண ஆடை நெய்தாளோ?
வாசல் கோலத்தில்

இரவிவர்மனின்
ஓவியம் ரசிக்காதவன்
அவளின் மூன்று புள்ளிக்
கோலம் ரசித்தேன்

சமஸ்கிருதமும்
சுவைக்கத்தான் செய்தது
அய்யராத்து அழகி அவளின்
மந்திர  உச்சாடனையில்

ஐயோ!
அவள் முத்தம்
இருக்கையில் ஏனோ
என் வீட்டில்
தேநீர் செலவே இல்லை

தொட்டுக்கொள்ள
அவள் அன்பு இருக்க
என் தோசைக்கு
சட்டினி அரைத்ததே இல்லை

அவள்  பார்வை
தீண்டும் நேரம்
சுவாசிக்க மறந்து போனேன்

அவள் விரல்
கோர்த்து நடக்க
தூரம் எல்லாம்
மறந்தேன்
நேரம் காலம்
கடந்தேன்

அவள் மடி
நான் சாய்ந்து
என் தலை
அவள் கோத
உயிருடன்  சொர்க்கம்
நான் போனேன்

அவள் கண்ணயர்ந்த
பின் எழுந்து
தூங்கும் அழகு ரசிப்பதில்
தூக்கம் நான் மறந்தேன்

அடியே! இந்த
ஒரு வாழ்க்கைகுத்தானே
அன்று உன் தந்தையின்
அரிவாள் எதிர்த்து நின்றேன்



No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்