Tuesday, November 22, 2011

அவளைப் பார்த்து


என்னை வைத்து
உன் இருதயத்திலிருக்கும்
காதல் வைத்து
ஒரு கவிதை என்றாள்!

கவிதை படித்துக் 
கொண்டிருப்பவனை
பார்த்து
கவிதை எழுது
என்கிறாயே என்றேன்

என்னைப் பற்றிதான்
கவிதை கேட்டேன்
கள்வரே! கவிஞரே!
உங்கள் எண்ணம்
பற்றி அல்ல...

என்னைக் கவிஞனென்றுவிட்டு
கவிதையாய்
கோபித்துக் கொண்டது
என் கவியின் உவமை

செல்லக் கோபம்தான்
இருந்தும் ஏனோ?
சட்டென்று சூரியன்
சட்டைப் பைக்குள்
விழுந்ததாய் உணர்ந்தேன்

உனக்கு " ----"
என்று பெயரிட்ட
உன் பெற்றோரைவிட
நான் ஒன்றும்
பெரிதாய் கவி
சொல்லிவிட முடியாது
என்றேன்...

காதல் மலர்
கல்யாணக் கனியாகையில்
பெற்றோருக்கு மேலன்றோ நீ?
நிரூபி உன் கவிதையில்
என்றாள்!

இதோ!!!

"எந்த மொழியோ நீ!
எனக்கு மட்டும் புரிய
உன்னை பெற்றவர்
எழுதியக் கவிதை நீ!

அழகு, அடக்கம்,
கல்வி, கலாச்சாரம்,
அன்பு, அரவணைப்பு
வெறும் ஆறே வார்த்தைகளில்
ஆறடி காகிதம் நிரப்பியவள்
நான்கு வேதங்கள்
அடக்கி ஆண்டவள்

நீ வந்தாய்
16 செல்வமும்
தேடி வந்தது
நம்மை மணக்கோலத்தில்
வாழ்த்தப் போகும்
பெரியோருக்கெல்லாம்
நிச்சயம் வார்த்தைப் பஞ்சம்

ஐயோ! நீ
உற்று நோக்கையில்
கவிதையால் படிக்கப்படும்
கவிஞனாகிறேன்

ஏனோ நீ
பக்கம் நெருங்கையில்
என் இருதய
வாய்க் கொண்டு
நூறுக்கு மேல்
சொல்லிப் பார்க்கிறேன்

நான் வாழ்ந்த
22 ஆண்டுகளுக்கான
பரிசா நீ?
இல்லை
வாழப் போகும்
நூற்றாண்டுகளுக்கான
வரமா நீ?

எழுத்துக்கள் சேர்ந்தது
வார்த்தைகளாவது
முக்கியமல்ல
பொருள் ஒன்று
வேண்டும் அதற்கு
இந்தக் கவிதை
வெறும் வார்த்தைக்
குவியல் இல்லை
என் வாழ்வின்
பொருளே, உனை
பொருள்படப் பாடும் இது"
என்று முடித்தேன்

பரிசுகள் சொல்லாமல்
துவங்கப் பட்ட
கவிதைப் போட்டி அது
இருந்தும்
என் அதிர்ஷ்டம்
முத்தப் பரிசுகளால்
என் கன்னத்து பர்சு நிறைந்தது

2 comments:

  1. அவளைப்பார்த்து..

    "கவிதையால் படிக்கப்படும் கவிஞன்.."
    " பெற்றோர் இட்ட பெயரே கவிதையாய்.."
    "எனக்கு மட்டும் புரிந்த மொழி .."

    கவியாற்றலை பாராட்டுகிறேன்.. அழகு..
    உன் மனதும் விரலும் எழுதிச்செல்லும் இன்னும்..

    திருத்தம்;-

    நிரூபி..
    கள்வனே..! கவிஞனே..!
    கன்னத்துப் பரிசு..


    இப்படி எழுதினால்.. இன்னும் வலிமை:-

    * என் கன்னம் அன்புப் பரிசுகளால்.." என்று முடித்து விடவேண்டும்.

    ஆனால் இது உனக்கு "கவிதை சீனியர்" என்ற முறையில் ஆலோசனை மட்டுமே..

    ReplyDelete
  2. நல்லது தம்பி.. நன்றி..

    திரைப்பட பாடல்களில் பிறமொழி தவறில்லை.
    அது வியாபாரம்..

    நாம் நம்மால் முடிந்த தமிழ்ப்பணி செய்பவர்கள் இல்லையா?
    நீ செய்வது உனக்கோ உன் நண்பர்களுக்கோ சாதாரணமாக படலாம்.
    ஒரு தமிழனாக, ஒரு கவிஞனாக நான், இந்த இளைய சமுதாயத்தைப்
    பார்த்து பெருமையடைகிறேன்.

    கவிப்பொருளை உள்வாங்குவதில் வாசகனுக்கு தடை இருக்க கூடாது.
    அதனால் வருங்காலங்களில் பிற மொழி சொற்களை தவிர்ப்பது நலம்.

    கவிதையின் தொடக்கத்தில்
    அன்புமிகுதியில் ஒருமையில் "உன்" என அழைக்கும் பெண்
    சிறிது நேரத்தில் " உங்கள் " என்று அழைப்பது தமிழுக்கு சரியில்லை..

    வானம் வசப்படும்..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்