Wednesday, December 26, 2012

அடடே ஆச்சரியக்குறி - 3

FLAMES நம்மை
கணவன் மனைவி என்கிறது,
<< 23 vayasulaiyum flames azhagu thaan Try Chellam ;) >>
ஆண்ட்ராய்டு ஜோசியன்
ஏகப்பொருத்தம் என்கிறான்,
ஜாவாஸ்கிரிப்ட் காதல் கணிப்பானோ
நூறை தாண்டி காட்டுகிறான்...

காதலர்களின் இத்தனை
பாரம்பரியக் கருவிகளும்
பொய்யாக வேண்டுமா?
பேசாமல் உண்மையை ஒப்புக்கொள்...

(#_#)---(#_#)

ஒற்றைபுறம் வெட்டுண்ட
மீசை நகைக்குது
<< காதல் கனவில் பமீசையை பறிகொடுங்கள்
உண்மையில் நீங்க அழகா இருப்பிங்க >>
toothbrush வந்த shaving gel
கேலி பேசுது
மாற்றி மாட்டிய செருப்புஜோடி
குத்தி காட்டுது
முட்டை தோளில் போட்ட
omlette கதைகள் சொல்லுது <>

காதல் பைத்தியம் எனை
பாதித்த ஆழம் பற்றி

(#_#)---(#_#)

என் சிறுக் குறும்புகளுக்கு
முறைகிறாயே?

என்னை
சீண்டும் உன் முடியை
உசுப்பேத்தும் உன் உதடை
வம்பிழுக்கும் உன் தோடை
<< கல்யாணம் ஆகுற வரைக்கும் தோடு... பின் பூரிக்கட்டை >> 
சிறையெடுக்கும் உன் சிரிப்பை 
உறக்கம்பறிக்கும் நம் காதலை

என்றாவது நான் ஏதாவது
சொல்லியதுண்டா... நீ மட்டும் ஏன்?

என் சிறுக் குறும்புகளுக்கு
முறைகிறாயே? << கள்ளி >>

 

(#_#)---(#_#)

ஆடடே ... நீ
ஆச்சரியக் குறியுடன் ... நான்
காதல் அழகான கவிதை...

அடடே ஆச்சரியக்குறி – 1 | 2

பின்குறிப்பு - உலகம் அழியாததின் காரணம்... காதலுக்கு ஆயுசு கெட்டி...

Wednesday, December 19, 2012

[2012 v1.0] மாயன் லீ(இல்)லை

எரி கல், கருங்குழி ,பேரலை
வாய்பிழவும் பூமி என்கிறான்
மாயன் நாட்குறிபென்கிறான்
ஆனால் தான்தான்
இந்த பேரழிவிற்கான
காரணமென்பதை மட்டும்
மனிதன் மூடி மறைக்கிறான்...

அழிவை கேட்டதும்
உயிருக்கு அஞ்சியவன்
அழித்த தன் செயலுக்காய்
இன்னும் வருந்தவில்லையே

தின்பதெல்லாம் விஷம்...
செய்வதெல்லாம் அதர்மம்
பேசுவதெல்லாம் காயப்படுத்தவே
வெல்வதேல்லாம் மிதித்து தள்ளியே

"வல்லனவற்றில் வாழ்வு வளம்" (Survival of the Fittest)
டார்வின் சொன்னதென்னவோ
உயிர்கள் உருவாகத்தான்
தான் மட்டுமே உயிரென்று கொண்டு
அழிவாய் மாற்றியே விட்டான் மனிதன்

இன்னும் இந்த பூமி
இருந்து என்ன செய்ய
உலகம் அழிந்தே ஆகா வேண்டும்...

சாக பயப்படுபவனே...
எறும்பின் எண்ணிக்கை; தீப்பட்டி வீடு
யானை உடல்; சோளப்பொறி காசு
அரசியல் அசிங்கம்; விலையோ நசுக்கும்
வெடிகுண்டு புகை;ஊரெல்லாம் பகை
அறிவியல் கொலை; அறிவே விலை
என்று வாழ்வே
போராட்டமாகிப் போனவனிடம் கேட்டு பார்
உலகம் அழிவதின் அவசியம் சொல்வான்...

                                        P.S. -  உயிரோடிருந்தால் மீண்டும் (ச)சிந்திப்போம்... புது மனிதனாய்




Friday, December 14, 2012

கடிகார பல்


எதோ குரூரமான
மிருகம் அடித்ததில்
 மார்கூடு பிளவுற்று கீழ்வானத்தின்
ரத்தம் சொட்டி துவங்கியது
அந்த தனித்த நாளின் போராட்டம்

கடும் பனியிலும் வியர்க்கவைக்கும்
ஒரு நீள் கனவை போர்த்தி
உறங்கிக்கிடந்தேன் நான் ...
நிஜத்தில் என்னை  பழிதீர்க்கும்
என் ஆசைகளை
அந்த கனவு கட்டிலில் சீரளித்திருந்தேன்

அந்த பெரும் காமப் போதை தெளியும் முன்
மீண்டும் மீண்டும் மீண்டுமொருமுறை
என் மார்பெலும்பு வெடிக்குமளவு
அந்த தனிமையை பருகினேன்...

தனிமை ... அது
குட்டி தூக்கும் தாய் பூனையின்
பற் கடி சுகமல்ல அது...
பத்து நாள் பசிக்கு சிக்கிய மான்பெறும்
சிங்கத்தின் பற்பதம்
அந்த நொடி முள்ளின்
துடிப்பை தங்குவதென்பது

என் வரலாறு ஆகிப் போன
அந்த தப்பு; அந்த சிரிப்பு; அந்த பயம்
என்று நான் கடந்தது
ஆயிரம் உருவம் அச்சுறுத்தும்
கொடும் கனவது

மனைவியை அள்ளும்
கணவனின் இரவு ஸ்பரிசத்தொடு
சடாரென்று  என்னை பிடித்தது
3600 சிலுவைகளை
என் மீது ஏற்றி எனை
குண்டூசி பள்ளத்தாக்கில் நடக்க செய்தது
விச முட்கள் முடிந்த
சவுக்குகளை என் மேல் வீசியது
முடித்து  கரும் மெகா மிருகத்தின்
மேல் என் தேகம் காட்டப்பட்டது

என் காய தேகம் கட்டிய
கரும் மேக மிருகம் தீடீரென்று
உப்பளக் காட்டில் கட்டவிழ்க்கப்பட்டது 

அதை துரத்திக் கொண்டு
குரூரமான மிருகமொன்று ...
என் தேகம் உயிர் பெற்றெழுந்து
வேதனை கட்டுக்குள்
மிருகத்தை இழுத்து கொண்டு
எதிர் திசையில் ஓடினேன்
ஓட முயன்றேன்
முடியாமல் தோற்றேன்

எல்லாம் முடிந்தது
எதோ ஒரு பேனாக் முள்
முறிந்து மடிகையில் ...
விழித்து பார்த்தால்...

எதோ குரூரமான
மிருகம் அடித்ததில்
 மார்கூடு பிளவுற்று கீழ்வானத்தின்
ரத்தம் சொட்டி துவங்கியது
அந்த தனித்த நாளின் போராட்டம்

Wednesday, December 12, 2012

மறப்பதென்பது


உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை

அலறிடும் கைபேசியில்  நீ
என்று வேண்டுவதை

உன் பெயரின் முதலெழுத்து
பார்க்கையில் உன்னை நினைப்பதை

தோழி எவளாவது என்றாவது
உன் பெயர் சொல்கையில்
கலங்கிடும் கண்ணினை

அதே உடை.. உனக்கு அழகான
அதே உடை பார்க்கையில்.. நீ என்னை
முறைத்து கடந்த அந்த நாளை நினைப்பதை

அவ்வளவு தான்..
இதை மட்டும் நிறுத்தி கொண்டால் போதும்
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...

நெருப்பின் மீது சுகமாய்
படுக்க பழகி கொண்டால்...
வழிகிற கண்ணீரை ஆனந்த
கண்ணீரென்று சொல்லி விட்டால்...
மசாலா நீரின் வாளிக்குள்
கண் விழிக்க தெரிந்தால்
இரவுகளை கண்மூடி
பகலினை இருதயம்மூடி கடந்தால்

அவ்வளவு தான்..
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...

என் அழுகை  தாங்காதவர்களுக்காக
சாதியின் கையில் நம் காதலை காப்பதற்காக
உன் பெற்றோரின் அருவாளிடம் உன்னை மீட்பதற்காக
சுருக்கமாக என் காதலை காப்பதற்காக
என் காதலின் மாரிலே 
நான் இறக்கும் விசக்கத்தி தான்
உன்னை மறப்பதென்பது...
உன்னை மறப்பதென்பதொன்றும்
அவ்வளவு கடினமில்லை...

என் இரவெல்லாம் நனையும்
தலையனைக் கவருக்கும்
என் ரகசியம்மொத்தம் அறிந்த
குளியலறை சுவருக்கும்
மட்டும் தான் தெரியும்
உன்னை மறப்பதென்பது
எனக்கு எவ்வளவு கடினமென்று...

Sunday, December 2, 2012

நடித்துவிடுகிறேன்

எதையும் பார்க்காதது போல்
கடந்துவிடுகிறேன்...

இருதயம் உடைத்துவிட்டு
போகும் அவளை,
நான் தேவைப்படாமல்
போன  என் நட்பை
எதையுமே

எதையும் கேட்காதது போல்
இருந்துவிடுகிறேன்...

என் முயற்சிகளை கண்டு
நகைக்கும் ஏளனங்களை,
என்னை பின்வாங்க சொல்லும்
அச்சுறுத்தல்களை
எதையுமே

எதையுமே சொல்லாமல்
வந்துவிடுகிறேன்...

அப்படி செய்தால் என்ன? என்பவரிடம்
இப்படி செய்தால் என்ன? என்பதை,
அது இல்லையா என்றவரிடம்
இது இருக்குது என்பதை
எதையுமே

எதையுமே உணராதது போல்
கிடந்ததுவிடுகிறேன்...

தன்  தேவை வருகிற பொது தான்
என்னை  அடையாளம் காணுகிற
என் உலகை,..
பணப்பையை கண்ணால் எடைபோடும்
என் உறவை அதன் வித்தையை,
எதையுமே

எதையுமே  தெரியாதவனாய்
நடித்துவிடுகிறேன்...

அழுக்கு  சட்டையில்
என்றோ மறக்கப்பட்ட 
நூறு ரூபாய் தாளின்
மௌனம் நான்...

மாதக் கடைசியின் நெரிசலில்
நான் தான் உன் கடவுள்

அந்த நாள் வரை
எதையுமே தெரியாதவனாய்
நடித்துவிடுகிறேன்...

Tuesday, November 27, 2012

சேவல்கள் நல சங்கம் - 2

சேவல்கள் நல சங்கம் - 1

முன்குறிப்பு - சேவல்கள் நல சங்கம் செவல்களுக்காக மட்டும் பேசுவதாய் இருக்க கூடாது. சேவல்களின் குற்றங்களையும் பெசவேண்டுமல்லவா?



நிழல்கள் தொடங்கி  நீர்பறவை தாண்டி
பரதேசியின் பாடல் வரை எழுதிவிட்ட
கவிபேரரசரின் பேனாவிற்குகூட
பெண்ணை எழுத
"கொடி காய்த்த இரு இளநீர்"
தான் உவமையாகிறது இன்றும்!

காந்தி கனா கண்டதுபோல்
தனியாய் தெருவிலெல்லாம்
நடக்க தேவையில்லை ...
இவளால் பயமின்றி முகப்புத்தகத்தில்
ஒரு  புகைப்படம் ஏற்ற முடிகிறதா?

வெறும் கரப்பான் பூச்சிகளுக்கும்
தெரு நாய்களுக்கும் தாண்டி...
பள்ளியில் குரு 
கல்லூரியில் வாலிபம்
பேருந்தில் இடி அரசன்
தெரு முக்கில் சிகரெட் ஆசாமி
நிராகரித்த ஆண்மகனின் அமிலத்திற்கு
இரவில் நிழலுக்கு கூட ...
இப்படி எத்தனைக்கு தான்
அவள் பயபடுவாள் இன்னும்?

வள்ளுவன் மூன்றாம் பால்
எதற்கு எழுதினான்...
மாதவம் செய்தவள் என
மீசை கவி துடித்தது எதற்கு

இன்னும்
சமைத்துபோடும் அடுப்பாக
இரவு  பசிக்கு விருந்தாக
பெற்றுகொடுக்கும்இயந்திரமாக
கோபம் காட்டும் பொருளாக
மட்டும்  இருக்காவா என்ன?
சாப்ட்வேரில் வேலை பார்த்தாலும்
இன்னும்  தன் கணினியின் ஆபரேட்டிங் சிஸ்டம்
மாற்ற தெரியாதவளாக வாளர்க்கபடவா?

இல்லை என்று சொன்னாலும்
ஏதோ ஒரு ரூபத்தில்
ஒரு பெண்ணின் காயத்திற்கு
காரணமாய் ஆண் இருக்கிறான்...

தேவதைகள் சிறகுகள்
ஒன்று விலங்கிடப்பட்டிருக்கிறது
இல்லையேல் ஒடிக்கப்பட்டிருக்கிறது...
எல்லோருக்கும் வரங்கள் கொடுத்தாலும்
இன்னும் அவளுக்காய் மிச்சமிருப்பது
ஒரு சாபம் மட்டுமே...
அது அவள் வாழும் நாட்கள்


Sunday, November 25, 2012

எதன் விசும்பலது



என் வீடுகளின் தரையுள்
ஏதேதோ ஓசை...
எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?

துடிக்க  அருக்கப்பட்டு
நிலையாக கட்டிலாக
உருகுலைக்கப்பட்ட மரத்தின்
காய அனத்தலோ?

அடி தெரிந்த ஆற்றில்
சுரண்டி வந்த மணலின்
எதோ  ஓரத்தில் ஒட்டிக்கிடக்கும்
ஈரம் ஆவியாகும் ஓசையோ?

மனைக்காக  நிலமிழந்து
விவாசயாமொழிந்த நொடியில்
பசிகண்ட வயிற்றின் முனங்களோ?

வீடிழந்த  எதோ ஓர் மிருகத்தின்
சாபமோ?
வீடில்லா  எதோ ஓர் மனிதனின்
வேதனையோ?

ஏதேதோ ஓசை...
எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?
என் வீட்டின் தரையுள் கேட்கிறது ...

மண்டைக்குள்  ஒலிக்கும்
டியூ தவறிய போது
கடன் கொடுத்த வங்கிக்காரனின்
கேட்ட வார்த்தையை தாண்டி...
"அங்க மாதிரி இது இல்லை"
என்கிற  வீட்டவரின் பெருமூச்சு தாண்டி
அருகிலுரங்குபவர் குறட்டை தாண்டி
ஏதேதோ ஓசை

எதுவாக இருக்கும்?
எதனுடையதாய் இருக்கும்?

பின்குறிப்பு - இப்படி பார்த்தால் சோறு கூட தின்ன முடியாது... மனிதன் வாழ தான் பூமி என்பவரே ... மனிதன் வாழ்வதற்கு மட்டுமல்ல பூமி...


Thursday, November 22, 2012

அடடே ஆச்சரியக்குறி - 2

சேலை கட்டிய உன் புகைப்படம்
ஏற்றுகிறாய் முகப்புத்தகத்தில்

அதில் சேலையை போய் அழகென்று
வர்ணித்து தொலைப்பவரெல்லாம்
முகத்திலிரண்டு புண்ணுடையோர்...

(O_O) + (O_O)

என்  நண்பர்கள் சந்திக்கும்
கடினமான கேள்வியும்
அதிகபட்ச தொல்லையும்
"ஏன் மச்சான் நான்ஜெஸ்ஸிய
காதலிச்சேன்?" என்பதே...

[அவளின் செருப்பின் நலன் கருதி
என் கண்ணத்தின் நலன் கருதி
பெயர் மாற்றப் பட்டுள்ளது ]


(O_O) + (O_O)

ஒரு குழந்தையை
அதிகமாய் அடி வாங்க வைப்பதும்
அழுதிட வைப்பதும் மிட்டாய் தான்...
ஆனால்
குழந்தைக்கு மிகப் பிடித்தது
மிட்டாய் மட்டும் தான்

எனக்கு உன்னை போல்...

(O_O) + (O_O)

யாரைபற்றி எழுதுகிறாய்
என்று ஒரு முறை கேட்டுவிடு

"உன்னை பற்றி தான்"
என்னும் என் பதில்
ரொம்ப நாளாய் காத்து கிடக்குது

(O_O) + (O_O)

 அடடே ஆச்சரியக்குறி - 1

Monday, November 19, 2012

பேட்சுலரின் சென்னை


தீண்டாமை ஒழிந்துவிடவில்லை
வேறு ஒரு உருவம் எடுத்துள்ளது

குடும்பத்தினருக்கு மட்டும் வாடகைக்கு
என்ற பலகை
நாய்களை அனுமதிக்கிற அந்த வாசல்வழி
எங்களை அழையா விருந்தாளியாக்கிவிடுகிறது

நாங்கள் வந்தாலே மகள்களை
உள் போகச் சொல்லி
முகத்திலடிக்கப்படுகிறது
அபார்ட்மென்ட் வீடுகளின் கதவு
அப்படி செய்வது  அவர்களின் மகள்
ஸ்பெஷல்  கிளாஸ் போவதை
தடுத்திடுமோ

எங்கள் யோக்கியதனத்தை
அவ்வளவு சோதிப்பது
இவர்களின் வீட்டு கழிவறை சன்னலில்
புகை கசிவதை தடுத்திடுமோ
ஆனந்த விகடனிலும் ராணியிலும்
தொலைந்த நடுப்பக்கத்தை மீட்டிடுமோ

நாங்கள் குளிர்பான பாட்டிலும்
வாழைப்பழ சீப்புமாய் வந்தால்
கீழும் மேலுமாய் பார்த்துவிடுவது
அவர்களின் மகன்
குருப் ஸ்டடி போவதை
தடுத்திடுமோ?

பனை மரம் என்று
எழுதிய இடத்திலிருந்து கூட
எங்களால் பால் குடிக்க முடிவதில்லை

மருமக உடைச்சா
மண்சட்டியும் பொண்ணாம்
எனக்கு நீ மாமியாரும் இல்ல
நான் உனக்கு மருமகனும் இல்ல
இங்க எந்த சட்டியும் உடைபடவில்லை
ஏனோ எங்கள் மீது  குற்றசாட்டு  மட்டும்


சோதனை நாய்களாய்
எங்களை அவர்களின் கண்கள்
தினம் முகர்ந்து பார்க்குது ஏனோ!!

என்ன முகர்ந்தென்ன
கழுதையால் என்றும்
கற்பூர வாசம் உணர முடியுமா என்ன?

Tuesday, November 13, 2012

ஆவளியிலோர் அணைந்த விளக்கு

நல்லெண்ணெய்கு பின்னான
சிகைக்காய் ஷாம்பூவாகிருந்தது

ஒரு  வரமாய்
உரல்  உருட்டி
மருமகள் இடுப்பொடித்து மாவிடித்து
அடுப்பெரித்து என்றுவரும்
அம்மாவின்  முறுக்கு ஜிலேபி எல்லாம்
இன்று  ஸ்வீட் கடைகள் கொடுத்தது

ரொம்பவே மாறிப் போச்சு
தீபாவளி 

=O=O=

பூமி சாவதற்கு முன்பே
அதன் மரண ஊர்வல
வெடிகள் தீர்ந்து போகிறது

இதோ ஆண்டுக்கு கொஞ்சமாய்

=O=O=

சிவகாசி மூலை இடுக்கில்
ஓசையின்றி தினம் எவரையோ
எரித்துவிடுகிறதென்ற
 கோபமா என்ன?

இதோ தெருவெங்கும்
பட்டாசுகள் மீது
பழிதீர்க்கப்படுகிறது

=O=O=

ஒரு வெடியால்
பாதிக்கப்பட்டது அந்த ஜப்பான்
இந்த  வெடியால்
உலகையே பாதிக்கிறது
இந்த குட்டி ஜப்பான்

=O=O=

எந்த கண்ணகி சபித்தளோ
பற்றி எரிகிறது பூமி

மின்வெட்டு  பூமியில்
இன்வெர்ட்டர் கருணையில்
ஏசி குளிரூட்டும்வரை
எவன் கவலைபடபோகிறான்

=O=O=
 
தெருவெங்கும் குப்பையாகிப் போன
அந்த வெடிக் காகிதங்களில்
எதோ ஒன்றில்

எழுதப்பட்டிருக்கலாம் எஞ்சிக்  கிடக்கும்
குழந்தை தொழிலாளியின் கனவு
எறிந்த  குடும்பங்களின் வேதனைகள்
பணக்கார முதலாளிகளின் சூச்சுமங்கள்

பின்குறிப்பு - 
பட்டாசு ஒரு நாள் சந்தோசம்... அதை என் குறை கூறுகிறாய் என்பவர்களே... இனி நீங்கள் உங்கள் வெடிகளை உங்கள் வீட்டுக்குள் வெடித்து புகையை உங்கள் குடும்பத்தோடு குடித்துவிட்டு மிஞ்சும் கனலையும் கறியையும் நீங்களே தின்று விடுங்கள்... எங்கள் பூமியை விட்டு விடுங்கள்

Tuesday, October 30, 2012

இன்று பிறந்த நான்(ள்)

முதல் வாழ்த்து யாருடையது
என்ற  அந்த நட்பின் போட்டியில்
என் தூக்கமே வென்றது...

=O=O=

இன்று ஒரு நாள் மட்டும்
உறக்கத்தின் தொந்தரவுகளும்
12 மணி தொன தொன பேச்சுகளும்
சுகமாய்  இருந்தது

=O=O=


தொழில்நுட்ப  வளர்ச்சி
தொப்புள் கோடி கூட
வயர்லெஸ் ஆகிப் போனது
தொலைபேசியில் வாழ்த்துகிறாள் அன்னை

நட்பு நாகரிகம் ஆகிப்போனது
தானியங்கி மென்பொருள்
வாழ்த்து செய்தி அனுப்புகிறது
நண்பனின் பெயரில்

=O=O=

கடனே அனுப்பிவைக்கும் 
happy birthday நண்பர்கள் ஏனோ  

"ஊர் தாதாவை
மர்ம  நபர் கொலை செய்துவிட்டால்
மகனிடம் துட்டி கேட்க வரும்
நண்பர்களை விட
நான் செய்யவில்லை என்று சொல்லி
அவனது பழி தப்பிக்கும்
பழைய  பகைவர்களை"
நியாபகபடுத்துவதை தடுக்க முடியவில்லை

=O=O=

எந்த கடையிலும் என் அன்னையின்
பாசம் கிடைக்கவில்லை
என்  எந்த சம்பாத்தியமும்
அதை வாங்க போதவில்லை ...
அவளும் நானும் தூர ...
ஆனால் அவள் பாசம் மட்டும்
என்றும் மாறா!!!

வாங்கிய லெவிஸ் ஜீன்சிலும்
பேசிக்ஸ் டீ சர்ட்டிலும்
எனக்காக உழைக்க உறங்காத
இவர்களின் இரவுகளின் சாயம் இருந்தது

=O=O=

பழைய மருந்துகள்
காய்ந்த பற்பசைகள்
தேங்காய் எண்ணெய்கள்
முகப் பவுடர்கள் வீசிய முட்டைகள்
10 நாள் காபி பேனா மை
என்று எதுவுமே கலந்து
என் மீது ஊற்றபடாத போது

ஆறு முறை குளித்து வந்து
ஏழாவது  முறை மீண்டும் அழுக்காகி
இரவு 12 மணிக்கு எட்டாவது குளியல்
நான் குளிக்காதபோது

23 வயதில்
முதுமை தட்டியது உணர்கிறேன்...

=O=O=

காதல் கலந்து அவளது
வாழ்த்து  வரும் என்று
போன வருடம் காத்திருந்தது
நியாபகம் வந்தது

இன்னமும் காத்திருகிறேன்...
நிறுத்த முடியவில்லை

=O=O=

எதிர்காலத்தில்
எதோ ஒரு வகுப்பு மாணவன்
"ராமானுஜமென்பவர் 1989 ஆம் ஆண்டு
சோலைமலை யோகமலர் தம்பதிக்கு
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் பிறந்தார்"
என்றென்னை படிப்பான் என்று சொல்லிக்கொண்டேன்

ஆனால் அதற்கான
எந்த  ஒரு முயற்சியும் இல்லாமலே
23 ஆண்டுகளை வீணாக்கியது
இன்று சுடுகிறது ...


Wednesday, October 24, 2012

நெய் தேடும் வெண்ணை

ஐயாயிரத்திற்கு நீ தின்றும்
ஹோட்டல்காரன் முகத்தில்
பார்க்க முடியாத மகிழ்ச்சி 
ஐந்து ரூபாய் அன்பளிப்பில்
பரிமாறும் பையன் முகத்தில்!

வெளிநாட்டு  ரகம் ன்னு
ஆயிரத்திற்கு வாங்கிய செருப்பிடம்
இல்லாமல்  போகிற விசுவாசம்
20 ரூபாயில்ஆரம்பித்து 15 ரூபாயில்
பேரம் முடிகிற அந்த கிழவரின்
தையலில் உழை(நிலை)த்திருக்கும்

தாடி, கைபேசி டாப்அப்,
இரண்டு மணி பேச்சு, காதல்
பிறந்த நாள் பரிசு, பக்க பக்க கவிதை 
என்று எதிலும் இல்லாத அந்த நேசம்
அதோ நீ வரும்வரை உறங்காமல்
உன் தாய் உருவில் காத்திருக்கும்

உறக்கம் உணவு உறவு
எல்லாவற்றையும்  தூக்கி போட்டுவிட்டு
நீ தேடித்திரியும் உன் தேடல்
நீ தூக்கி போட்டதில்தான் 
இருக்குது என்பதை தெரிந்துகொள்ளாததேனோ


தேடி கண்டுபுடிக்க வேண்டியதில்லை
உன் தேவைகள் எல்லாம்...
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்
கடவுள் போலத்தான்...
நீ  உணரவேண்டியது மட்டும்தான் பாக்கி

Tuesday, October 23, 2012

ஆடடே ஆச்சரியக்குறி - 1

வேடிக்கை பார்க்க போன என்னை
தாவி பாய்ந்து கவ்வி கொண்டு
காதலின் குளம் புகுந்தது
அவள் விழி மீன்கள்

=O=O=

அவள் முக்குத்தி கலங்கரை விளக்கம்
அனால் அதை பார்த்த பிறகு தான்
அடிக்கடி இருதயக்கப்பல் கரைதட்டுது

=O=O=

துணிக் கடை நுழைந்த
பெண்ணை ஒரே ஒரு உடை
தேர்ந்தெடுக்க சொல்வதுதான்
பெண்ணிற்கு கடினமான சவால்...

இரண்டு உடை காட்டி
எது எனக்கு அழகு என்று
அவள் கேட்பது தான்
ஆணுக்கு  கடினமான கேள்வி...

=O=O=

எனது மின்னஞ்சல்களுக்கும்
எந்தவொரு   குருஞ்செய்திக்கும்
நீ பதில் அனுப்பும் பொழுதை விட
அனுப்பாத போதுதான் அதிகம் மகிழ்கிறேன்

என்  மனம் விரும்பிய பதில்களை
நானே நிரப்பிக் கொள்ளலாமல்லவா!

=O=O=

உன்னை நினைக்க
தொடங்கிய  பிறகுதான்
ஒரு நாளுக்கு 24மணிநேரம்
போதாமல் தவிக்கிறேன்...

பின்குறிப்பு - கற்பனை காதல் போதையாகையில் காதல் கொண்டவர்கள் மீது பொறாமை அதிகமாகிறது.

Thursday, October 18, 2012

மழையின் மழலை

மேகக் குழந்தை
கால் இடறி விழுகிறாள்
இங்கே ஊரே சிரிக்குது

O~O~O

மனிதன் எவ்வளவு
மனிதனை தொலைத்துவிட்டான்
என்பதை தூறலுக்கு விரிகிற
குடைகளை எண்ணிப் பாருங்கள்

O~O~O

மழை வேளையில்
மறுநாள் காளானுக்கு முந்த
திட்டமிடுகையில்  அட்ரீனலின் சுரப்பெடுக்கும்
அம்மாவின் வதக்கிய காளான் நினைக்கையில்
எச்சிலோடு தேனூறும்
இன்றெல்லாம் நாளையின் சாலை நிலைமை
நினைத்தே வயிற்றில் புளி கரையும்

O~O~O

சிமெண்ட் காடுகளில்
துணியாலான குடை காளான்
இன்றைய மழை காலம்

O~O~O

சிறை கம்பி பின்னால் மகனை
பார்க்கும் தாயவள் ஏக்கமாய்
வெப் காமீரா வழியே காத(லனை)லியை
பார்க்கும் காதலின் வலியாய்
அதோ அந்த கட்டிடத்தின்
சன்னல் கண்ணாடியில் மோதி வழிகிறது
கணினி முன் சிறை இருக்கும்
அவர்களை பார்த்து அழுகையாக

O~O~O

எவராவது கவனித்ததுண்டா?
விவசாயி விசித்திர மனிதன்...
அவன் கண்ணீர் வறண்டிருக்கும்
புன்னகையில் தான் ஈரப்பதமிருக்கும்
மழையாய் சிரிப்பான் அவன்

O~O~O

குடைகளை மடக்கிவிட்டு
ஒரு முறை மழையினில்
நடந்து பாருங்கள் ...
இன்னொரு முறை
மனிதனாய் பிறக்க ஆசை படுவீர்

மழையை பற்றி  - 1

Sunday, October 14, 2012

இரண்டாவது நாக்கு

பீசா கடையிலிருந்து ஐந்திலக்க சம்பளம்
ஐபோனில் அம்மாவிடம் கேட்கிறான்...
சாப்பிட்டியா அம்மா, என்ன சாப்பிட்ட?
நெல்லு சோறும் சாம்பாரும்
என்று பொய் உரைக்கிறாள் ...
கூழ் குடித்த வட்டிலில் கோலமிட்டபடி

பொய்யின் முந்தியில் முடிஞ்சுவச்ச காசு
இவன் எதிர்காலத்து உயிலெழுதா சொத்து

பத்துமாத பாசம் மூன்று முடிச்சு நேசம்
தலைஎழுத்தை  மாற்றிவிட அரபுநாடு போனவனிடம்
கேட்கிறது "வேலஎப்படி, தங்குற இடம் வசதியா" என்று
ராச வேல; போக வர காரு; தங்க வீடு
என்று பொய் உரைக்கிறான்
ரப்பர் ரோடு போட்ட களைப்பில் உறங்கிய
 20 பேருடன் ஓர் சிற்றறையிலிருந்து ...

பொய் வீச்சமெடுத்த அந்த அறையிலும்
அவர்களின் கனவு மட்டும் மணந்து கிடந்தது

நான் ஆட்சிக்கு வந்தால் அதை தருவேன்
நான் ஆட்சிக்கு வந்தால் இதை தருவேன்
என்று எதை எதையோ சொல்லி
எல்லாவற்றையும் எடுத்து போக
போட்டி போடும் அரசியல்வாதிகளின் பொய்கள்...

இந்த பொய்க்கு அந்த பொய் பரவாயில்லை
ஏதாவது  மா(ஏ)ற்றம் வருமென்ற நம்பிக்கையில்
எதோ ஒரு பொய்யிடம் சிக்கிவிடுகிற மக்கள் ...

எதோ ஒரு முதலிரவு அறையில்
நீங்க தான் என் முதல் காதல் என்கிற பொய்
காதலை தொலைத்தவன் நண்பனிடம்
அவளை(னை) மறந்துவிட்டேன் என்கிற பொய்
உன் மேல் சத்தியமாய் இனி
அந்த கருமத்தை தொடமாட்டேன் என்கிற பொய்
அம்மா  ஸ்பெஷல் கிளாஸ் என்கிற பொய்
அடுத்த பரிச்சையில் நல்ல மார்க் எடுப்பேன்
இப்ப ஒரு தடவ வாங்கி கொடுங்க என்கிற பொய்
"இந்த வருடம் முதல்" ஆண்டு முதலே
தொடங்கிவிடும் எதோ ஒரு பொய் 
 மச்சான் உன்ன தான் பார்க்கிறாள் என்கிற பொய்

என்று எதோ ஒரு பொய்யின்

கோர பல்லிடுக்குகளில் சிக்கி உலகம்
இரையாகி கிடக்குது ...
ருசி கண்டுவிட்டது உலகத்தின் நாக்கு

Sunday, October 7, 2012

உப்பு கரிக்கும் சிரிப்பு

புகைப்படம் - அன்னை இல்லம், மயிலாப்பூர், சென்னை

மூணு  மகன் ரெண்டு மவா
 
மகளுங்கள கட்டி கொடுத்தது
அமெரிக்கா மாப்பிள்ளைக்கு
வருசத்துக்கு ஒருக்கா
பாக்க வருவா… படிக்கிறதால
பேரப்பிள்ளைகள கூட்டி வரமுடியலையாம்
 
மவனுவ வியாபாரம்
பணக்கார  மருமவளுங்க
அமெரிக்காவுல படிக்குற பேரப்பசங்க
 
டிவிப் பெட்டி
மூத்தவன் வாங்கி கொடுத்தது
இளையவன் ரெண்டு பேரும்
ஒரு பட்டுபுடவ வாங்கிட்டு வந்தானுங்க
மகளுங்க ஒரு நெக்லசு வாங்கி வந்தாங்க
அனுபவிக்குற வயசில்லன்னு சொன்னேன்
சொன்னா  கேக்க மாட்டுக்குது. பாசம்!!…
 
தேக்கு கட்டிலு
பட்டரி காத்தாடி
நடக்க குச்சி படிக்க புஸ்தகம்
ஊள்ளன் ஸ்வெட்டரூ
எவ்வளவோ வந்தும் அவர்கள் எதிர்பார்த்தது மட்டும்
வந்தே சேரவில்லை. எவர் வந்து தருவார்…
 
அவர்களின்  பொக்க வாய் சிரிப்பெல்லாம்
கண்ணீர் உப்பின் கரிப்பிருக்கு. யாருக்கு தெ(பு)ரியும்
பின்குறிப்பு  - இன்று நான் பார்த்து கொள்வேன் என்றுவிட்டு நாளை உன்னை பெற்றவரையும் இந்த நிலைமைக்கு ஆளாக்கும் நமக்கு சமர்ப்பணம்

Sunday, September 30, 2012

சேவல்கள் நல சங்கம் - 1

முன்குறிப்பு- தலைப்பிலிருந்து தரை வரை இது படிக்கும் பெண்களுக்கு கருத்து வேறுபாடாய் தெரியலாம் (தெரியும்)... வேறுபாட்டை கருத்தில் சொல்லுங்கள் விவாதிப்போம்.
மாதர்  குலமே!
இன்னுமொருமுறை இன்னுமொரு ஆணை 
வரதட்சணை குற்றவாளியாக்கும் முன்பு 

நகைக் கடைகளில் வீசிதீரும் 
பெருமூச்சின் காரணம் சொல்லிவிடுங்கள் 
அடுக்கி கிடந்து தூசி படியும் 
பட்டு புடவையின் தேவை சொல்லிவிடுங்கள்

ஆண்கள் நாங்களும்  எங்கள்
குற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம்

ஏழு இலக்க பேங்கு பேலன்சு
எடுப்பு  வேலைக்கு ஆளு
ஏக்கர் கணக்கில் சொத்து
எளிமையா ஒரு வீடு
என்று எதுவுமே பெண் வீட்டார்
மாப்பிள்ளையிடம் எதிர்பார்ப்பதில்லை
என்றொரு வாக்குமூலம் எழுதி தாருங்கள்

நானே பெண்வீட்டில் வாங்குபவனை
செருப்பால் அடிக்கிறேன்...

உன்(ங்கள்) மாமியார் வாங்குகையில்
தவறென்று பேசிய நியாயம்
உன் அண்ணனின் திருமணத்தில்
உன்னை பெற்றவள் பட்டியளிட்டு
எங்கே போயிற்று
உன் தம்பிக்கு பெண் பேசுகையில்
"எனக்கெல்லாம்  எவ்வளவு செஞ்சா எங்க ஆத்தா"
என்று பீற்றுகையில் எங்கே போயிற்று
என்பதற்கு மட்டும் விளக்கம் தாருங்கள்

ஆண்கள் நாங்களும் எங்கள்
குற்றத்தை ஏற்றுக்கொள்கிறோம்

வராத வரதட்சணைக்காய்
வெடிக்கப்பட்ட காஸ் சிலிண்டர்பற்றி
கவலை படும் உலகமே
வாங்க முடியாத வைர  நெக்லசுக்காய்
விவாகரத்து வழக்கு பார்த்த மனுக்கள்,
ஆண் முகம் பேத்தெடுத்த
பூரிகட்டைகள் பற்றி யாருக்கு அக்கறை

 பின்குறிப்பு:
1) இதை யாரையும் காயபடுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டதல்ல
2) ஒரு மாணவனின் பார்வை. விமர்சாக ஆசிரியர்கள் என் கருத்தில் தவறு கண்டால் போருத்தருளூமாறு கேட்டு கொள்கிறேன்.
3) இனி இந்த சேவல் நல சங்கம் ஆண்களுக்காய் குரல் கொடுக்கும்.

Friday, September 28, 2012

நாங்கள் விற்பனைக்கு

உலக சந்தையில்
உடலெல்லாம் விற்பனைக்கு
 .
திருமண மண்டிக்குள்
நீ நுழைந்தால்
100 பவுன் தள்ளுபடியோடு
பூக்கள் விற்கக் கிடக்கும்
 .
கல்லூரி கோடோவ்னில்
தினம் நீ பார்த்தால்
விற்று தீரும் மூளைகள்...
நல்ல இளசை புது புது தினுசாய்
தனியாய் விற்பனைக்கென்று 
கடைகள் தேவை இல்லை
தெருவெல்லாம் விலை பொருள்
தன்னை தானே விற்க  
விளம்பரம் செய்து திரியும்
 .
ஒரு இஞ்சுக்கு முகப்பூச்சு
காரக்குழம்பு கொட்டிய ஹேர்ஸ்டைலு
ஒன்னே முக்கால் அடி செருப்பு
மறைக்கப்படவேண்டியதேல்லாம் காட்சிக்கு
நுனி நாக்கில் ஆங்கிலம்
அவனி(ளி)டம் இல்லாத அது என்னிடம் இருக்கு
என்று எல்லோரும் 
தன்னை தானே விளம்பரம் செய்வது 
முற்றிய கத்திரிக்காயையும் 
சந்தையில் விற்றிட முயலும் முயற்சிதானே 
விற்று தீருங்கள் உங்களை நீங்களே  

Wednesday, September 26, 2012

செத்தவன் பேசுகிறேன்

அழுதால்  கண்ணீர் வருமென்பது
காயங்கள் வலிக்குமென்பது
உயிர்இன்றி மரணமென்பது

இப்படி உயிர் வாழ்ப்பவரின்
எல்லா விதியும்
கடந்து(மரணித்து)விட்டேன்...

=O=O=

மறுத்த பிறகும் நம்பிக்கையில்
வலிக்கும் என் காதலை
டிராப்ட்டில் வைத்திருக்கிறேன்.
மீண்டும் அனுப்பும் வரை மரணம்...
இல்லை என்று தெரிந்த பின்பும்
எனதே என்ற நம்பிக்கையில்
உன்னை வைத்திருக்கிறேன்
கிழிந்த காகிதத்தில் கிழிக்கப்பட்ட இருதயத்தில்.
தூர எரியும் வரை மரணம்...

=O=O=

இன்று தான் அவளை
முதலில் பார்த்தேன்
இன்று தான் நானும் அவளும்
ஒரே வண்ண உடையில் வந்தோம்
இன்று  தான் என் காதல் சொன்னேன்
இன்று  தான் என் காதல் கொன்றாய்

365 நாளும் என் நாட்காட்டியில்
கிழிக்கப்படுவது தேதியாக இருந்தாலும்
கிழிபட்டு சாவது நானாகவே இருந்தேன்...

=O=O=

"எப்படி இருக்க" என்ற
தோழனின் கேள்விக்கு
உயிரப்பேதும் இல்லாமல்
சிரித்து வைக்கும் உதடு...

ஒ(வ்வொரு)ரு முறையும்
என்னோடு சேர்த்து கண்ணீரையும் 
கொலை செய்தேன்...

=O=O=

கையளவு இருதயத்துள்
கையடங்கா கண்ணாடி துண்டு போல்
உன் நினைவு.. என்னுள்ளே
சுவாசிக்கும்  நொடியெல்லாம் மரணமடி

என் தலையணை குடித்த
கண்ணீரை அலசிப் பார்
என் இரவுகளின் நீளத்தில்
என்னோடு கிடந்து பார்
நான் எழுதும் காதலை
கொஞ்சம் மொழி பெயர்த்துபார்

என் கடவுச்சொல் திருடி
என் மின்னஞ்சல் ஒருமுறை திறந்து பார்
எங்காவது நான் செத்து கிடப்பேன்...

"நான் உன்னை காதலிக்கவில்லை "என்றது 
அவள் எனக்கு கொடுத்த ஆயுள் தண்டனை
நான் இன்னும் அவளை காதலிப்பது
நானே எனக்கு கொடுத்துகொள்ளு[ல்லு]ம்
மரண  தண்டனை

பின்குறிப்பு - குண்டூசிகள் மீது படுத்துறங்கும் காதலுக்கு சமர்ப்பணம்...

Tuesday, September 25, 2012

அசிங்கத்தின் வீச்சம்

ஒரு சாண் பசிக்க
நோய் தாயை நசுக்க
இளையாள்  கணவன்
வரதட்சனை என யாசிக்க
சிகரெட்டு சூடு இம்சிக்க

எதோ  ஒரு காரணம்
எத்தனையோ கட்டிலில்
இரையாக்கிய அவளின் பெயர்
தே***** என்றால்

அறிப்பெடுத்த  பொழுதுகளில்
சொறிய தேடும் கையாய்
ஆ(பெண்)ணை ஆ(பெண்)ணும் தேடி
காதல் நட்பென்ற புதர் மறையும்
அசிங்கங்கள் என்னவென்பது?

=O=O=

கண்ணகி பேத்திகளே
மார் மறைக்க வேண்டிய துப்பட்டாவை
கழுத்தில் சுற்றி வந்துவிட்டு
குனிகையில் நிமிர்கையில்
முன்னிருப்பவனை முறைப்பதிலில்லை
உங்கள் கற்பு

ஆண்களின் கண்
காய்ந்து  போன மாடுதான்
ஆனால் மலம் தின்னாது என்றும்....

=O=O=


அனுபவிக்க மட்டுமல்ல,
இளமை அனுபவம்  சொல்லவும்
சம்பளத்திற்கு மட்டுமல்ல,
கொஞ்சம்  வேலை செய்யவும்
கால் நனைக்க மட்டுமல்ல,
கடற்கரைகள் மனம் கழுவவும்

ஆனால்,
அதை அதை
அங்கங்கு  செய்வதும் இல்லை
செய்யவிடுவதும் இல்லை
காதலித்து மட்டும் தான் தொலைகிறார்கள்

காதலிப்பவர்களை கூட மன்னித்திடலாம்
காதல்  என்று சொல்லிவிட்டு
சண்டை இடுவது
சேட்டை செய்வது
அடுத்தவன் வயிற்றில் நெருபிடுவதுமாய்...

பின்குறிப்பு :

இவைகள் 
முகர்ந்து பார்க்கப்பட்ட
அசிங்கத்தின் வாசம் அல்ல 
நம் சுவாசத்தை 
இம்சை செய்யும்வீச்சம்



Sunday, September 16, 2012

நானொ(மொ)ரு கோழை


130 likeகளுடன்  அசிங்காமாய் இருந்த 
அவள்களின் புகைப்படம் கீழ்
nice cute என்றிருந்ததெல்லாம் 
பொய் என்று சொல்லாமல் வந்திருக்கிறேன்

அவள்களிடம்  நல்லவனாக பேசி
தூரத்தில் பார்க்கையில் 
தொங்குது குலுங்குது என 
வாய்கூசத நச்சுபாம்பை பார்த்தும் 
ஒன்றும் செய்யாமல் வந்திருக்கிறேன் 

இந்தியாங்ரதாலதான் இப்படி
இதுவே அமெரிக்காவா இருந்தா என்றுவிட்டு
பொது இடத்தில் புகைத்தவர்களை
காலியான பிஸ்கட் பாக்கெட்களை
ரோட்டிலேயே எறிந்தவர்களை
பார்த்தும் பொருத்திருந்திருக்கிறேன்

நான்கு வருடங்கள்
kozhiyin century dhoniyin helecopter
என்று  புலம்பிவிட்டு; பணத்தை
அவன் பாதத்தில் குவித்துவிட்டு
நான்கில் ஒரு வருடம் மட்டும்
இந்தியா தத்தி மச்சி
ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் இல்லை
என்றவரோடு தலை ஆட்டியதுண்டு

என்னிடம் லஞ்சம் வாங்குபவன் 
என்னை  அதட்டி கேட்கிறான்?
தரமில்லாததை  தந்துவிட்டு 
தயக்கமின்றி விலை நிர்னையிக்கிறான்
தெருவில்  குப்பை  போடுபவன்
தைரியமாய் போடுகிறான் 
விவாசாயி  விளைவித்ததை 
அவனுக்கே அதிக விலைக்கு விற்கிறான்
ஒட்டு கேட்க மட்டும்
என்  வீடு தேடி வருகிறான்
தப்பு செய்பவன் எல்லாம் 
தைரியமாக திரிகிறான் திரிய விடுகிறேன் 

இப்போ சொல்லுங்க 
நான்(ம்) கோழைதானே?

இன்னும் எதற்கு சம்பாதிக்கிறேன்

இன்னும் எதற்காக
என் இந்த ஓட்டம்

திண்டிவனம்  தேடியும்
சோழிங்கநல்லூர் சலித்தும்
மூழ்க்காத மடிப்பாக்க மிச்சத்திலும்
நான் தேடும் "Sweet Home"
எட்டா லட்சங்களாய் கிடக்கிறது
என் கை இருக்கும் சொச்சங்களோ
செல்லாத காகிதமானது

இந்தியா வரும் எண்ணெய்
பேரல்கள் மட்டும் விலை அதிகமாம் 
முதலாளிகள் கோடிஸ்வரராயிருந்தும்
கம்பனிகள் நஷ்டத்திலாம்
பெட்ரோலும் சொந்தக்கரும்
கனவான போதும் சிரிக்கிறேன்
இன்னும்  சொந்தக் காலால்
நடப்பது  இலவசமாக இருப்பதால்

காய்கறி பலசரக்கு
ஆடை அடிச்சு போடும் வரி
தண்ணீர் வீட்டு வாடகை
பாலூற்றிடும் பால் தங்க விலை
என  எல்லாம் போட்டி போட்டு எகிறுது...
எ(ன்)ங்கள் சம்பளத்தைத் தவிர

அனாவசியம்  என்றிருந்ததெல்லாம்
அவசியம் ஆகிப்போனது தேவையால்
மனிதனின் ஆசை என்றிருந்ததெல்லாம்
பேராசை ஆகிப்போனது விலையால்

மாடாய் என்ன?
பேயாய்  உழைத்தும் கூட
professional tax, pf போக
எஞ்சிய சம்பாத்தியம்
வீட்டு லோன் டியூவுக்கே தட்டி நிற்குது

செல்லாத காசை சம்பாதிக்கிறேன்
சொல்லாத ஆசைசுமந்து திரிகிறேன்
இன்னும் எதற்காக
என் இந்த ஓட்டம்...

Wednesday, September 12, 2012

காதல் எனக்கு வேண்டாம்

அது என்ன கண்ணா
இல்ல  அம்மிக் கல்லா?
வச்சு நெஞ்ச அரச்சுபுட்டா

அவ பொண்ணா
இல்ல கண்ணி வெடியா
இருதயம் பூர பதுங்கி கிடந்து
அப்ப  அப்ப வெடிக்க வச்சா

அவள், என் நரம்பெல்லாம்
ஓடும் கண்ணாடி கரைசல்
விதையின்றி அவள் விளையும் 
நான்  காதலின் கரிசல்

அவள் புகைப்படம் என்
இமையுள் முளைத்த முள்
என் இரவிடம்
இனி உறக்கங்கள் இல்

பூவுக்குள்ள தேனா
காதல் நெஞ்சுக்குள்ள
வ(ம)ண்டு அவளாய் குடிக்காமல்
நானாய் எங்க சொல்ல

சொல்லாத காதல்
அது தாளாத பாரம்
சொல்லி  அவளிடம்
செல்லாமல் போனால்
இங்கு ஆறது காயம்


அதிகம் ஆசை படுபவனல்ல


ஜோடியாய் நிலவொளி  குளியல்
உறங்காமல் பேச்சு
கெஞ்சி கொஞ்சி முத்தம்
அப்ப அப்ப ஊடல்
அவளாய்  குளிரும் கூடல்
எதுவும் வேண்டாம்...

என் இருதயத்துள் இல்லனாலும்
நான் பார்க்கும் தூரத்தில் அவள்
அதிகம் அவள் பேசலன்னாலும்
எதோ ஒன்றிரண்டு குறுஞ்செய்தி
அவளை காதலிக்க முடியாவிட்டாலும்
அவள் புகைப்படத்தையாவது காதலித்துவிட்டு  போகிறேன்

சொல்லி இருதலையும்
செத்து போவதற்கு
சொல்லாமல் ஒருதலையாய்
என் காதல் வாழ்ந்த்து விட்டு போகட்டும் 

பின்குறிப்பு - சொல்லாமல் காதலிப்பவர்களின் கோழைத்தனத்திற்கு சமர்ப்பணம்

Tuesday, September 11, 2012

அணு அணுவாய்... கூடங்குள சித்திரவதை

இரும்பு கோட்டைக்குள்ளே
இத்துனுண்டு அணுவத்தான பிளக்கான் ...
உனக்கும் சேத்துதான மின்சாரம் கொடுக்கான் ...
அறிவியல் புரட்சி செய்து
உன் இந்தியாவ தான வளக்கான்...
அப்புறம் எதுக்குளே இத்தனை எதிர்ப்பு
... இது ஐந்தை புறந்தள்ளிவிட்டு
பகுத்தறிவதாய் அறிந்தாய் சொல்பவர்.

லட்சம் பேரு எங்கள
பிறந்த மண்ண விட்டு போக சொல்வ
குளிர்வித்த நீர் கழிவோ
அணு  பிளந்த ஆபத்து கழிவோ
கொண்டுவந்து கொட்டி
எங்களுக்கு உணவிட்ட கடல கொல்வ
... இது ஆறறிவு  எதுவுமின்றி
அழிவை  உணர்ந்தவர் சொல்வது...

அலட்சியம் ஆபத்து அரசியல்
அழுகை பயம் கோபம் என்ற
புகைக்குள் முச்சு தினறிகிடக்கிறது கூடங்குளம்
நீ நான் நாம் இங்கே வாழும் 
உல்லாச வாழ்விற்காய்...

கால் பைசா பெறாத கண்டவளு(னு)டன்
கடலை என்று கணநேரமும் தொலைபேசி
கரண்டை கரியாக்கியதுண்டா?

யூனிட்டு வெறும் அஞ்சுதானென்னும்
மீட்டர்  தான் பழுதாச்சேன்னும்
அலட்சியத்தில்  அணைக்காமல்
விளக்கோ விசிறியோ விட்டதுண்டா?

மார்கழி குளிரோ பங்குனி வெயிலோ
வெப்ப  மரக் காத்திருக்கு
வாங்கி வர தேக்கு மாற சன்னலிருந்தும்
ஏசி போட்டு போர்வைக்குள் உறங்கியதுண்டா?

ஐஞ்சு தட்டு தின்னு நல்ல கொழுத்திருந்தும்
ரெண்டு மாடி ஏற இயலாத உன்னால்
மின்தூக்கி  தூக்கிவிட்டு தான் தினம் ஏறுவதுண்டோ?

மண்பான நீரிருக்க புதுசாக காய் இருக்க
குளிரில் கிடந்த பழசு தான்
வேண்டுமென்று உண்டதுண்டா?

அடுத்த தெருமுதல் ஆளுடன் பயணமுன்னு
பெட்ரோலா விரையாமாக்கியதுண்டா?
குனிந்திடசோம்பலாகி நல்லியைஅடைக்காமல்
நீரையும் சீரழித்ததுண்டா?
அவள் எவனுடன் ஓடிப்போகிறாள்
என்ற நெடுந்தொடரின் ஆர்வத்தில்
அடுப்பு எரிவாயுவை வீனாகியதுண்டா?

மின்தட்டுபாடிடம் இடிபடுவதுமட்டுமல்ல
அங்கே அவர்கள் அடிபடுவதற்கும்
அவர்கள்  ஊர் அழிவதற்கும்
காரணமும் நாம் தான் ...
உன்னால் உண்டான இந்த அவலத்தை
இத்தனை லட்ச நிவாரணம் துடைக்க போவதில்லை...


பின்குறிப்பு - என் அணு உலை வேண்டமேன்கிறோம் என்கிற கூடங்குளத்தாரின்  இந்த 13 காரணங்கள் என் நெஞ்சில் முள்ளா குத்துச்சு... அதில் வடிந்த வரிகள் .

Monday, September 10, 2012

இனி சல்வார்தான் அணிய போகிறேன்

இனி சல்வாரோ சேலையோ தான்
அணிந்து கொள்ள போகிறேன்...
பாதம் தொடும் சடையிட்டு
சரம் சரமாய் மல்லிக்கப்பூ
வைத்துக்கொள்ள போகிறேன்

புடவை சுற்றிய கல் போதும்
முடியாது என்றிருந்ததெல்லாம் முடிந்திருக்கும்

அவர்கள் மத்தியில்
இனி சல்வாரோ சேலையோ தான்
அணிந்து கொள்ளப் போகிறேன்.

நான் கேட்கவேண்டிய அவசியமில்லை
இனி எல்லாருக்கும் நிச்சயமாய்
நான் தேடும் கேள்வியின் பதில் தெரியும்
ஒரு நாள் கூட சிரிக்காதவனுக்கெல்லாம்
முப்பத்திரண்டு பல் தாண்டி எகிறு கிழிந்து
முப்பத்திமூன்றாவதும் வெளி தெரியும்
இனி நான் அழைத்தால்
காப்பி சாப்பிட நேரம் இருக்கும்
எனக்கும் சேர்த்து பிரியாணிக்கும் காசிருக்கும்
இனி  நான் எது செய்தாலும் சரியாக இருக்கும்

எவன் எதை பார்க்கிறான் என்றறியாமல்
பகுத்தறிவு இழக்கும் அவள்களின் தேசத்தில்
அவர்களை அதை மட்டுமே பொருட்படுத்தி
மற்றவரை உதாசீனப்படுத்தும் அவன்களின்
மத்தியில் பிறந்து தொலைத்து விட்டேன்


எனவே!
இனி  சல்வாரோ சேலையோ தான்
அணிந்துகொள்ள போகிறேன்
பசிக்காக தின்னலாம்
ருசிக்காக தின்னலாம்
பார்ப்பதை  எல்லாம் தின்றால்?
அப்படி தின்பவர் மத்தியில் பிறந்துவிட்டேன்
எனவே!
இனி  சல்வாரோ சேலையோ தான்
அணிந்துகொள்ள போகிறேன்




Wednesday, September 5, 2012

MAKEUP போட்ட கவிதை


ஓவியம் ஓவியன் வரைந்ததாகவே
இருக்கும் வரை தான் அழகு...
தனியாய்  சிங்காரம் செய்யாதவரை
தான் பெண்ணும் சிங்காரி...

உன்னை அசிங்கமாக்கும் அதற்கு

அலங்காரம் அழகு சாதனம் அழகு நிலையம்
என்று எவனடி பெயர் வைத்தான்...

சீதை நாணேற்றி
ராமன் நான் சிறை வீழ்ந்தேன்
என்று  என் பேனா பேசி இருக்கும்

அந்த கிறுக்கு சிறுக்கி விரலில்
இறுக்கி பிடித்த நூலிடம்
உன்  புருவக் கூந்தல் அறிபடாமல் இருந்திருந்தால்

மஞ்சள் கரிசாலை சாறெடுத்து
வெள்ளைத்துணி நனையவிட்டு
நெய்விளக்கில்  எரியூட்டி
விளக்கெண்ணெய் விட்டு குழைத்து
கள்ளி  நீயும் பூசி வந்தால் போதுமே
இந்த மாமன் நெஞ்சு களவுகொடுப்பேன்

அதை  விட்டு பங்குனி மாச
மச்சு வீடு மாதிரி இமைஎல்லாம்
இம்புட்டு  பூச்செதுக்கு?
சும்மாவே பெண் தினம் அழுவாள்
இதில் கண்ணுக்குள் ரசயான மையெதுக்கு

உன்  உதடு சாயமிறங்கி போயிருந்தால்
இனி எனக்கு சொல்லி அனுப்பு
முத்த முறையாலே முழுக்க சாயம் தாரேன்
அமுதுண்ணும் உதட்டில் விசத்துண்டு
எதற்கு உரச வேண்டும்

ஆயிரம் கறை இருந்தும்
அம்புலிய அழகில் மிஞ்ச ஆளேது?
அந்த  ஒற்றை பருவால்
நான் கொண்ட காதல் மாறது

தெரிந்தும்  ஏனடி...
எனக்கு காதல் தண்டனை கொடுத்த
உன் முகத்துக்கு வேதியல் தண்டனை...


இன்றொருநாள் அழகென்று
நீ பூசும் விஷமெல்லாம் நாளை விடியுமுன்னே
விஷமம் காட்டும் வேண்டாம்...

சிங்காரித்து  வந்த அழகாலே
என்னை  நீ இம்சிப்பாய்
நீ சிங்காரிக்க ஆராய்ச்சி என்று
அவர்களோ எலி முயல்களை இம்சிப்பார்கள்

இதெல்லாம் தேவையா?
நான் தேடும் அழகெல்லாம்
முகத்தில் அல்ல அகத்தில்...
என்  காதலை உள்ளே அனுப்பு
தன்னால் உள்புறம் அழகாகும் எனக்கானது போல்...


தொடர்புடைய  பதிவு - ஹைஹீல்ஸ் பற்றி 

பின்குறிப்பு  - கண்மை தயாரிக்க இன்னும் பல வழி இருக்கிறது. நான் சொல்லியது ஒரு வழி. 

Tuesday, September 4, 2012

காதல்(கள்) வலிக்கவேயில்லை

அன்றொரு நாள் 

ஜெனிபர் சொல்லி போனாள்
அவள்  அவனை காதலிப்பாதாய்
நிலா சொல்லி போனாள்
அவன் தான் பணக்காரன் என்று 
 செல்வி  உதறிப்போனாள்
முறை மாமன் அரிவாள் முறைக்குதென்று

அதில் எதுவுமே வலிக்கவேயில்லை

பின்னொரு நாள் 

ஸ்வேதா தூக்கி எறிந்தாள்
என்னை விட அவன் அழகென்று 
பிரியா இருதயம் உடைத்தாள்
நாம்  வேறு சாதி என்று 
பாத்திமா முறைத்து போனாள்
நாங்கள் வேறு மதம் என்பதால் 

இன்னும்  பலக்காரணங்கள் பலரால்
சொல்லி என் காதல் சாகடிக்கப்பட்டது

அதில் எதுவுமே வலிக்கவேயில்லை

உன்னிடம் கூட காதல் சொல்ல 
பயமே இல்லை ... இதை  தாண்டி 
நீ என்ன சொல்லிவிடுவாய் 

சொன்னாலும்  
காதலிழந்தவர் எல்லொரும் அதிகம்
சொல்லும் பொய்யைத்தான்
நானும் சொல்லுவேன்...

எனக்கு வலிக்கவே இல்லை...

பின்குறிப்பு - 
1. இந்த கவிதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே 
2. பொண்ணுங்க பெயர் யோசிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. எனவேதான் ஆறு காரணம்

இவர்கள் பிச்சை எடுப்பதில்லை


நல்லாதன உடம்பிருக்கு
உழைத்தால் என்ன?
படிக்கும் வயதில் 
பிச்சை எடுக்கிறாயா?
.
உனக்கு அமைந்தது போல் தான் 
எல்லோர் வாழ்க்கையும் என்ற நினைப்பில் 
முனங்கி போனயாமே? அன்று பிச்சை 
எடுத்திருந்தவர்களை பார்த்து...
.
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
அழகாய் அடுக்கி வைத்து
வரியோடு கொடுத்தால் உடசல்களையும்
அடுக்குமாடி கட்டிடமாய் இருந்தால்  
ஆண்ணாச்சி சொல்லும் பொய்யை
ஏசி அறையில் கண்ணாடி குடுவையுள்ளே
முந்தா நாள் பழசையும் 
வாங்கும் நாம் இருக்கும் ஊரில் 
.
இவர்களை நம்பி முதலீடு
செய்யப்படுவதோ...
.
ரீமொட் கவரும் ஐம்பது ரூபாய் பர்சும்
ருசியே இல்லாவிடினும் நம்பிக்கை தரும்
ஐம்பது ரூபாய்க்கு பத்து ஆப்பிளும்
பத்து ரூபாய்க்கு மூன்று பேனாவும்
வலி தீர்க்கும் என வலிக்க பேசும் தைலமும் ... மட்டுமே தான்
.
இருந்தும்
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
ஓடிப்போன அப்பா
நோயால் ஓய்ந்துபோன அம்மா
வரதட்சனையால் மணமாகாத அக்கா
தப்பி தவறி திருமணமானால்
பணமென்று பிச்செடுக்கும் அத்தான்
தான் தொலைத்த படிப்பை
தன் தம்பி தேடி ஓடும் செலவு
என்ஜினியர் படித்தும்
வேலை இல்லாமல் நடுவுள்ளவன்
ஆப்பரேசன் செய்தால் நேராகும்
போலியோவால் வளைந்த கால்
இத்தனைக்கும் நடுவில் அவள் காதல்
.
இப்படி இவர்கள் முதுகிலும்
நெஞ்சிலும் நம் கண் தெரியா பாரம்
இருந்தும்
இன்றெல்லாம் அவர்கள்
பிச்சை எடுப்பதே இல்லை...
.
யாரவது ரெண்டு பேர்
வாங்கினால் போதும்
இன்று உலை வைத்து விடலாம்
அம்மாவுக்கு மாத்திரை
தம்பிக்கு இன்டெர்வியு பாரம்
வாரக்கடனுக்கு வட்டி
தங்கச்சிக்கு குண்டுமணி தங்கம்
குடிகார அப்பனுக்கு குவார்ட்டர்
இதை எல்லாம் மறந்து போகிறான்
அந்த கூடை காலியானால்... காலியானால்??

Thursday, August 30, 2012

makeup போட்ட மலரே


இரண்டு விழியாலே
அள்ளி மென்றாளே
அழகாலே விழியுள்ளே
கிள்ளி வைத்தாளே
இதய  சுவரெல்லாம்
பரண்டி போனாளே
லப்டப் மறந்து அவள்  பெயரை
என் இருதயம் புலம்ப செய்தாளே

-oOo-

make up போட்ட மலரவள் பார்வை
என் single என்னும்
டுலெட் போர்டை 
தூர எறிந்ததே
என் பெயர்தான்
அவள் பெயரிருக்கும்
என் மாமன் பெயருக்கு
நாளை ஓய்வு தருமே...

-oOo-

சூரியன் உதித்தல்ல,
என் நாட்கள்...அவள்
மின்கடித்ததில் விடியுதே
சொல்லாத என் காதல்
தொண்டைக்குள்ளே
தினம்  மடியுதே...

-oOo-
 
சொல்லாமல் மெல்லாமல்
என் காதல், குரவளையில்
முள்ளாய் குத்துதே
நெஞ்சுள்ளே கட்டெறும்பாய்
உசுரை கடித்து குதறுதே

-oOo-

அவள்  பதில் வர தாமதித்தால்
நான்  படும்பாட்டை
refresh பொத்தான் மட்டுமே அறியும்
காதல் சொல்லி மறுத்திடுவாளோ
தாங்கும் இருதயம் இல்லை
எனக்கு  மட்டுமே தெரியும்

-oOo-

இருந்தும்
அனுப்பாத கடிதங்களை
நீ படித்தும் புரியாத கவிதைகளை
பத்திரப்படுத்திக் கொள்வேன்

பொம்மை  கேட்டு வாங்கி தர
மறுக்கும் உன்னிடம்
கோபித்து சாப்பிடாத நம் மகளை
உன்  பிடிவாதமீது  நான் கொண்ட
பயம்  சொல்லி சந்தபடுத்த தேவைபடுமடி...

பின்குறிப்பு - அவளிடம் சொல்ல தைரியமில்லாத ஒரு காதல் ... நிச்சயமாய் ஒரு தலை காதலில்லை[அவ்வளவு நம்பிக்கை]

Monday, August 27, 2012

மாறிப்போன அர்த்தம்

புகையும் குடியும் கேடு...
அவன் எந்த கேட்ட பழக்கம்
இல்லாத நல்லவன் என்றான்...

அவனோ  அடுத்த தெருவுக்கு
பூமியை மாசக்கி பைக்கில் போனான்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

எந்த பொண்ணையும் அவன்
ஏறெடுத்து பார்த்ததில்லை
நல்லவன் என்றான் 

அவன் பார்ப்பதெல்லாம்
ஏறெடுத்து பார்க்கும் உயரத்தில்
இல்லை என்பதை யாரறிந்தார்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

அரசியல் - அனாவசியம் பேசி
நேரம்  வீணடிக்க மாட்டான்
நல்லவன் அவன் என்றான்

அரங்கேறும் அவலங்களுக்கு
பின்னால் அவன் போடாத
ஒரு ஓட்டும் இருந்தது

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

... o ...

இருக்கும் இடம் தெரியாது
குனிந்த தலை நிமிராது
ரொம்ப நல்ல பொண்ணு அவ என்றான்

அதெல்லாம் படிதாண்டி
தெரு கடக்கும் வரை மட்டும்தான்
என்று தெரியாமல்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

அப்பாட்ட காசுக்கு நின்னதில்ல
வீணாக போனுக்கு ரீச்சார்சு பண்ணினதில்ல
ரொம்ப நல்ல பொண்ணு அவ என்றான்

அதுக்கெல்லாம் சேர்த்து
ஒரு லூசு அவங்க அப்பா பையில்
கைவைப்பது தெரியாமல்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

என் சொல்பேச்சு கேப்பா
நல்ல மருமக என்றா

இடுப்பு கொத்து சாவி
இவா இடுப்பு வரும் வரைதான் அது
என்று தெரியாத மாமியா

என்ன மகா மாதிரி பாத்துக்கிட்டா
நல்ல மாமியா என்றா

இவா போட்டு வந்த நூறு பவுனின்
போதை தீரும் வரைதான் அது
என்று தெரியாத மருமக

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

முட்டாள்களின் தேசத்தில்
அறிவாளி  முட்டாளாகவே பார்க்கப்படுவான்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது


கவிஞனின் கொசுக்கடி

முத்த முள்ளாலே
நித்தம்  கொன்றாளே
மொத்த தூக்கத்தை
கடத்தி சென்றாளே...

இரவு  மட்டும் வந்து
இதயம் மட்டுமல்ல
உடல்கள் முழுதும் குடிபுகுந்தாலே
இமை மூடாத
வசியம் செய்தாலே

good night குறுஞ்செய்தியை
புகையாக  அனுப்பியும்
அவள் உறங்கவே இல்லை
எப்படி நுழைந்தாள்
என் வீட்டினுள் விளங்கவே இல்லை

சொல்லாத  இடமெல்லாம்
கைவரிசை காண்பித்தாள்
முத்தத்தின் தலும்பாலே
முத்திரைதான் பதித்தாள்

அவள் காதலை
என் ரத்தத்தில் கலந்தாள்
பெயரறியா நோயிலே
நானும் தான் விழுந்தேன்...

...

ஆவலுடன் களவி முடித்த நான்
சலித்துப் போகையில்

அவள் ரத்தத்தால்
அவள்  கல்லறையில் எழுதுகிறேன்...
என்னை  உறங்கவிடாத காதல்
இங்கே உறங்கி கொண்டிருகிறதென

காதலி வதைத்தால் மட்டுமல்ல
ஒரு கவிஞனை கொசுக்கடித்தாலும்
கவிதையாகும்







Friday, August 24, 2012

ஏ(ன்)மாற்றம்?





டாஸ்மாக்கின் கல்லா காசுகள்
பாதி சொல்லிய காரணம்...
ஏமாற்றிய காதலென்று

தற்கொலை பாறைகளில்
விழுந்தவரின் எதிரொலி
விஷம் கொண்டவர் சொல்லாமல்
முழுங்கிய வார்த்தைகள்
தூக்குக் கயிறில் நெரிக்கப்பட்டு
கொலையுண்ட வேதனை
என்று எல்லாம் சொல்வதுவும்...
ஏமாற்றியதாய் காதலைத்தான்

சிரைக்கப்படாத தாடிகள்
சிதைக்கப்படும் மணிக்கட்டுகள்
வீசப்படும் அமிலங்கள்
எல்லாம் குற்றம் சொல்வதுவும்
ஏமாற்றியதாய்  காதலைத்தான்

காய்ந்து போன மாடே
பசும்புல் பசிக்கண்ணாலே
வைக்கோல் பார்த்த அவசரத்தில்
மேய்ந்து தொலைத்தாய்...
புல்லின் ருசி காணாமலே
நீயே உன்னை ஏமாற்றியது தெரிகிறது
உன் கல்லிருதயத்தில் வேர்விட்ட
ஆசை செடி வெளிவரவோ மறுக்கிறது...

அடுக்கடுக்காய் குற்றமெல்லாம்
உன்புறமென புரிகையிலே
ஏமாந்த நீ ஏமாற்றியது காதலென்று புலம்புகிறாய்...

நீ ஏமாந்தது உண்மைதான்
அனால் ஏமாற்றியது காதலல்ல
காதலை குற்றவாளியாக்கும்
உன்னை பெற்றெடுத்தது மட்டும் தான்
காதல் செய்த குற்றம்...
உலகிற்கு அது கொடுத்த ஏமாற்றம்

Wednesday, August 22, 2012

யார் அந்த பைத்தியம்


பைத்தியக்காரர்கள்  எப்போதும்
சட்டையை கிழித்துக்கொண்டும்
தனிமையில் சிரித்துக்கொண்டும்தான்
இருப்பார்களா என்ன?
சடைபிடித்த முடியும்
சிரைக்கப்படாத தாடியும்
அழுக்கடைந்த நகமும்
வீச்சம் எடுக்கும் தேகத்துடந்தான்
இருப்பார்களா என்ன?

கிளிக்கப்படாத ஆடையில்
தான் இருந்தார்கள் ...
சுற்றத்துடன் இருந்தும்
சிரிக்கத் தெரியாதவராய்
தான் இருந்தார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சிலநேரம் உதடுகளால்
மட்டும் சிரித்தாலும்
உள்ளுக்குள் சிடுசிடுத்து
தான் கிடந்தார்கள்...
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

கையொப்பம் இடு என்றால்
கணினியில் தட்டச்சும்
புத்திசாலியாக இருந்தார்கள்
மகன் படிக்கும் வகுப்பு
மறந்தவர்களாய் இருந்தார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

நண்பர்களை சந்திக்கையில்
வீட்டின் விலை வேலை
பற்றி பேசினார்கள்
அப்பரைசல் மேனேசரை திட்டினார்கள்
நட்பை மட்டும்
மறந்தவர்களாய் இருந்தார்கள்...
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சொந்தங்கள் சந்திக்கையிலும்
பட்டு சரிகையின் அகலம்
புதுசாய் வாங்கிய காரு என்று
பகட்டை மட்டுமே பேசினார்கள்
தன்னை தானே
ஏமாற்றிக் கொண்டார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சினிமாக்கள் போல் தங்கள்
காதலையும் கற்பனை செய்தார்கள்
கிடைத்த சுவை போதாமல்
கிடைக்காததை நினைத்து
வாழ்க்கையை கசப்பாக்கி கொண்டார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

இதோ இதை
எழுதிய படித்த
எதோ ஒருவராக இருந்தார்கள்
எல்லோராகவோ எதோ ஒருவராக  
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

Thursday, August 16, 2012

நீ... நான்... நாம்...

வீதி எங்கும்
தர்மத்தின் பிணங்கள்
தேசம் தோறும்
நீதி கற்பழிக்கபட்டிருந்தது
வீடு தோறும்
எதிர்காலம் அழுது ஓலமிட்டது
.
ஓசையின்றி எல்லாம்
நடந்துகொண்டே இருந்தது
நடத்தியவர் யார்?
 .
தேடிய எல்லோர் இடுப்பிலும்
உலர்ந்த ரத்தக் கறையுடன்
ஒரு கத்தி மறைக்கப்பட்டிருந்தது
செத்த எந்த தர்மத்தினுடையதோ அது?
 .
பாதி பேர் முகத்தில் முதுகில்
பிரண்டப்பட்ட நகத்தின் தழும்புகள்
கற்பழிக்கப்பட்ட எந்த நீதியின்
தப்பிக்கும் முயற்சியின் தோல்வியோ அது?
.
எதோ ஒரு கொலைக்கு
செய்ய சொல்பவனையும்
செய்து முடிப்பவனையும் தவிர
மீதமுள்ளவரும் காரணமாய் இருப்பதால்
எல்லோர் கரங்களிலும் ரத்தக் கறை
 .
இறங்கிவந்த அவதாரப் புருஷன் அவன்
இருந்தும் அவன் சட்டைப் பையில் இருக்கும்
பத்தில் எட்டு நோட்டுகள் கருப்பாய் இருந்தது
.
பசி ஆற்ற மட்டும் அல்லாமல்
பகட்டும் காட்டி இறங்கிடும்
என் பாதிவேளை உணவுகள்
களவாடப்பட்டதாகவே இருந்தது
சில நேரம் இலைகளில்
சிலநேரம் செரித்த மலங்களில்
 .
அன்பின் அரண்மனை
என்று இன்று நீ பிதற்றுவது
நேற்று ஒரு கொலையின்
களமாய் இருந்திருக்கலாம்
தெய்வம் வாழும் கோவிலென்பது  
மனிதம் எறிந்த சுடுகாடாய் இருந்திருக்கலாம்
.
தட்டிக் கேட்க்கும் முன் என்னை பார்த்தேன்
என் கைகளிலும் ரத்தக் கறை
என் முதுகிலும் நகத்தின் தழும்பு
என் பைகளிலும் கருப்பு நோட்டுகள்
எந்தன் இடுப்பிலும் ஒரு கத்தி ரத்தக் கரையுடன்
என் வீட்டிலும் எறிந்த பிணவாடை
என் உணவெல்லாம் ஒருவரின் பசி வாடை
 .
ஊரோடு ஒத்து வாழ வேண்டுமல்லவா?
களவாடப்பட்டதை உண்டு
கத்தியை கூர் தீட்டி
இடுப்பில் மாட்டிக்கொண்டு
மீண்டும் தொடர்ந்தேன் மறு நாளை
 .
எவனோ செய்கிறான்
எவனோ துடிக்கிறான்
என்னை தீண்டாத வரை
அடுத்தவனை கொள்ளும் பாம்பை
அடிப்பதும் பாவம் இந்த தேசத்தில்
 .
பெருமைபடுகிறேன் மாபெரும் தேசத்தின்
குடிமகன் என்பதில் ...
இத்தனை இருந்தும் 66  ஆண்டுகள்
காப்பாற்றிவிட்டதல்லவா 
ஆங்கிலையன் விட்டுசென்ற சுதந்திரத்தை
 .
காந்தி சிரித்துக்கொண்டே களவாகட்டும்
ராமன்கள் எல்லாம் ராவணாகட்டும்
கண்ணகி தேசத்தில் கற்பு விலையாகட்டும்
டெஸ்ட்டுபில் விளைந்து பசி தீரட்டும்
66  ... 6000 ஆனாலும் தேசம் வல்லரசை நோக்கி
என்று பொய் உரைக்கட்டும்
தேசம் நாசமாய் போகட்டும்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Sunday, August 12, 2012

பண மரம்

இருபத்தியோராம் நூற்றண்டின் மகாத்மாக்களே...
நீங்கள் உழல்களில் காட்டி
செய்தி தாள்களை நிரப்பும்
செய்த்திகளில் மட்டுமே நாங்கள்
கோடிகளை பார்த்ததுண்டு...

அந்த கோடிகள் எதுவென்று தெரியுமா?

அதோ டிஜிட்டல் போர்டு போக
வெள்ளை போர்டுக்காய் நிற்கும்
மீன்காரியின் காலில் கடுக்கும் வழி அது...

அன்லிமிடெடிலும் அடங்காதது
ஐந்து ரூபாய்க்கு கணக்கு பார்த்து
லிமிட்டெடு மீல்சிலே
அமைத்தியாகிப் போன கூலியின் பசி அது...

அங்கே சேர்த்தால் கற்றையாய்
டொனேசன் வேண்டும் ...
யூனிபார்ம்க்கு தொடங்கி புஸ்தகம் வர
எவ்வளவோ வேண்டும் என்று
கார்பரேசன் பள்ளிக்குள் சிறை வைக்கப்பட்ட
செருப்புத் தொழிலாளி மகனின் கனவு அது...

இந்த கடையில்
எழுபத்தி நாலு ரூபாய் ஐம்பது காசு
அந்த கடையில்
எழுபத்தி நாலு ரூபாய் இருபத்தி ஐந்து காசு
என்று கணக்கு பார்த்ததின் மிச்சம் அது...

பொண்ணு ஆளாயிட்ட
புகுந்த வீடு போட்டு போக
சீரு செக்க துப்பிருக்க என்று
மனைவின் கேள்வி நாக்கை புடுங்க
பொறுப்பு வந்து தூக்கிபோட்ட குடிப்பழக்கமது...

ஐம்பது  பவுணு போட்டு
தங்கச்சிக்கு கல்யாணம்...
பேரனோடு விளையாடி ஓய்ந்த
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அமைதியான காசி பயணம்...
குடுவாஞ்சேரியே ஆனாலும்
சென்னைக்கு மிக அருகில் அன்பான வீடு
என்ற நடுத்தர வாசிகளின் வாழ்க்கை அது...

நாங்கள் கணக்குகளில் கூட
கண்டிராத  கோடிகளை
நீங்கள் உழலிலும் வழக்கிலும்
பார்க்கவா தினம் எங்கள் ஓட்டம்...

நாங்கள் பணம் காய்க்கும் மரமல்ல
ஆனால் இனி அசையாமல் நான் இருக்கும் வரை
உங்கள் வீட்டில் கதவு சன்னலில் இருக்கும்
செத்த மரங்களும் பணம் காய்க்கும்
எங்கள்  உழைப்பில் வேர் பாய்ச்சி எம் உயிர் உறிஞ்சி...

Saturday, August 11, 2012

முகங்களின் புத்தகத்தில்

உனக்கு  நிறைய
படிக்க  கொடுத்து உன்னிடம்
நிறைய படித்துக் கொள்ளும் உலகம் இது...

0#0#0#0#0#0


அந்த வெள்ளை சல்வாரில்
இந்த பச்சை பட்டில்
செல்லக் குழந்தையோடு
என்று எல்லா புகைப் படங்களிலும் அவள்
தேவதையாகவே தெரிந்தாள்...

இதை அவளிடம் சொல்லி  இருந்தால்
பார்த்திருக்கலாம் 
அவளுள்ளிருக்கும் அரக்கியோ!
இல்லை  அவளுக்கு காவலிருக்கும் அரக்கனோ

0#0#0#0#0#0

இந்த புத்தகத்தின் இடுக்குகளில்
தங்கள் காதல் மயிலிறகை
பொத்தி பொத்தி வைத்து
அது போடும் குட்டிக்கு காத்திருக்கும் பலர்...

0#0#0#0#0#0

காமம் களவு விஷம் வேஷம்
என்று தனக்குள் இருக்கும்
போலி முகங்களை
பலர் கட்டவிழ்த்துவிடும் இடம்...

0#0#0#0#0#0
குப்பையை தெருவில் 
போடுபவன்... மாசு பற்றி 
ஒரு தேசம் அழிய 
பார்த்தவன்... அதிகாரவர்க்கம் பற்றி 
ஓட்டு போடாதவன் 
ஓட்டை அரசியல் பற்றி 
மின்சாரத்தை  வீணடித்தவன் 
மின்வெட்டு பற்றி என்று

எதோ ஒன்றிரண்டை பகிர்ந்து
தம்  கடமை முடித்துக்கொள்ளும் உலகம்...

0#0#0#0#0#0

இது ஒரு கனவு...
உனக்கு தேவையானதை 
நீ தேர்ந்தெடுக்கலாம்...
பிடித்தவர்களை மட்டும் 
உள்  அனுமதிக்கலாம்...
பலிக்கவும் செய்யலாம் 
பாழக்கவும்  செய்யலாம்...
0#0#0#0#0#0

நீ  என்ன சொன்னாலும் 
கேட்டுக்கொள்ளும்
உன் வார இறுதியை செலவில்லாமல் 
நகர்த்தி செல்லும் 
உன் செல்லக் காதலி இவள்...

0#0#0#0#0#0

இது நாமே நமக்காய்
உருவாக்கிய சுவர்க்கம்...

சிலர் நரகமாக்காதவரை...

பி.கு. - முகப்புத்தாக கலாச்சாரத்தில் என்னை ஈர்த்தவை என் எழுத்தில் 

Sunday, August 5, 2012

பாதை நீளமானது

அந்த பாதை மிக நீளமானது...
என்னோடு பலர் நடந்து கடந்து சென்றனர்...

முகம்தேரியாதவர் தான்
பழக்கமாகினர்...
தீடிரென்று கண் மறைந்தனர்...
நான் கவலையின்றி தொடர்ந்து நடந்தேன்...

சிலர் எனக்கு
வழி சொல்வதாய் சொன்னார்கள்
சிலர் என்னிடம்
வழி கேட்டு தொடர்ந்தார்கள்...

எங்களோடு  வந்தவர் சிலர்
திடிரென்று பிணமாய் சாய்ந்தார்கள்...
நாங்கள் நிற்கவே  இல்லை
கண்ணீரை அவர்களின் துணைக்கு விட்டுவிட்டு
தொடர்ந்து நடந்தோம்...

ஒரு நேரம் கூட்டத்தில் நடந்தேன்

 என்னோடு நடந்தவருக்கு
என் துணை கசந்து அழுத்துப் போகையில்
எனை பிரிந்து இன்னொருவரோடு சேர்ந்து
நடந்தனர் நாளை அதுவும் கசக்குமென்பதை மறந்து

சில நேரம் தனிமையில் கிடந்தேன்...

ஏதாவது என்னால் ஆகுமென்கையில்
என்னை சேர்த்து நடந்தார்கள்
அவர்களின் தேவை தீர்ந்து போகையில்
தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து நடந்தார்கள்

மீண்டும்  எழுந்து நடந்தேன்...

வழியில்  கண்டேடுத்தவைகளை
கூவி விற்றுக்கொண்டிருந்தான்...
தேவையை வாங்கியவர்
சுகமாய் நடந்தனர்...
தேவைக்கதிகமாய் வாங்கியவர்
சுமையோடு நடந்தனர்...

கண்ணில் பட்டதெல்லாம்
தன் சொந்தம் என்று
சுமை ஏற்றிக் கொண்டார் சிலர்...
நான் வெறும் கையோடே நடை தொடர்ந்தேன்

இரண்டு நாட்கள் போதாது
தெரிந்தும் வார இறுதியைகாட்டியே
ஐந்து நாட்களை ஓட்டும் ஒரு வாழ்க்கை போல
இது அது என்று எதையோ சொல்லி
தொடர்ந்து நடந்தேன்...
இந்த  பாதை மிக நீளமானது...

பி.கு. - இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


Friday, August 3, 2012

ஈகை


அடுத்தவர் பெயர் கொண்ட அரிசி
பசித்தவர் பசி போக்கும் ஈகை

அவன் கண்ணில் தெரிந்த பசியை
இவன் உணர்த்தத்தான் விழைவு
கருணை விழும் இதன் பாத்திரத்தில்...ஈகை

அவள் முன்னாள் இவனிடம்
இவர் கேட்டுவிட்ட அதிர்ஷ்டம்
என்றுமே சில்லறை இல்லாத பையில்
இன்று பத்துரூபாய் இருக்கும்...ஈகை

பசி துளைக்க
உடல் உழைக்க வலிக்கையில்
இதை நீட்டி பிழைக்கும் சிறு(ல) உயிர்கள்...ஈகை

வரி சலுகையின் உதவியால்
உதவிக்கரங்களும் நிறையுது
வெளுத்து போன கருப்பு பணங்களால்...ஈகை

திருவிழாவில் தொலைந்து
முதலாளியின் பீடி சூடுக்கு பயந்து
சிக்னலில் கார்களின் கதவு தட்டும் ஈகை

தாவரங்கள் செய்த ஈகை
உன் தட்டில் உணவாய்
உன் மரணத்தால் உன் உடல்
நாளை செய்யும் ஈகை
ஆறடிக்கு உரமாய்
நடுவில் நீ செய்த ஈகை
உன் பிள்ளைக்கு புண்ணியமாய்
முடிவில் நீ செய்யும் ஈகை
இன்னொருத்தருக்கு கண்ணாய், உயிராய்

பாத்திரம் அறிந்து செய்வதல்ல
நீ செய்வது அந்த பாத்திரத்திற்கு தானா
அந்த பாத்திரம் பலனடைந்ததா 
என அறிந்து ஈகை செய்... நீயும் கடவுள்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்